பிற விளையாட்டு

ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை + "||" + Rani Rambal, Manika Badra nominated for the Kel Ratna Award

ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

ராணி ராம்பால்

நாட்டில் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஏற்கனவே ரோகித் சர்மா (கிரிக்கெட்), அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல்), நீரஜ் சோப்ரா (தடகளம்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் (இருவரும் குத்துச்சண்டை) ஆகியோரது பெயர்களை பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. இந்த பட்டியலில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோரும் இப்போது இணைந்துள்ளனர். ராணி ராம்பாலுக்கு கேல்ரத்னா விருது வழங்கக்கோரி ஆக்கி இந்தியா அமைப்பு சிபாரிசு செய்திருக்கிறது.

கேல்ரத்னா விருதுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் கவனத்தில் கொள்ளப்படுகிறது. 2017-ம் ஆண்டில் ஆசிய கோப்பை போட்டியில் வாகை சூடி அசத்திய இந்திய பெண்கள் ஆக்கி அணி, 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. 2019-ம் ஆண்டு நவம்பர் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களின் முடிவில் 6-5 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 2-வது ஆட்டத்தில் ராணி ராம்பால் அடித்த ஒரே கோல் தான் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு வித்திட்டது. அவரது தலைமையில் இந்திய அணி சிறந்த தரநிலையாக 9-வது இடத்தை பிடித்தது. உலக விளையாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். இதனால் ராணி ராம்பாலுக்கு கேல் ரத்னா விருது கிடைக்க கணிசமான வாய்ப்புள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த கவுரவத்தை பெறும் முதல் இந்திய ஆக்கி வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.

அர்ஜூனா விருதுக்கு...

மற்ற ஆக்கி வீராங்கனைகள் வந்தனா கட்டாரியா, மோனிகா ஆகியோரது பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. வந்தனா 200 சர்வதேச போட்டிகளிலும், மோனிகா 150 சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் நடந்த பெண்கள் ஆக்கி லீக் தொடரின் இறுதி சுற்றில் ஜப்பானை தோற்கடித்து இந்திய அணி மகுடம் சூடியதிலும், ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றதிலும் இவர்கள் முக்கிய பங்குவகித்துள்ளனர். ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத்சிங்கின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இவர் ஒலிம்பிக் தகுதி சுற்றில் ரஷியாவை வீழ்த்திய இந்திய அணியில் அங்கம் வகித்தவர் ஆவார்.

மல்யுத்தத்தில் ஏற்கனவே வினேஷ் போகத்துக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் ருசித்தவரான சாக்‌ஷி மாலிக், உலக மல்யுத்தத்தில் பதக்கங்கள் வென்ற தீபக் பூனியா, ராகுல் அவாரே மற்றும் சந்தீப் தோமர், நவீன் ஆகியோரது பெயர் அர்ஜூனா விருதுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதே போல் பேட்மிண்டனில் சாத்விக் சாய்ராஜ்ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, சமீர் வர்மா ஆகிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது கேட்டு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

மனிகா பத்ரா

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ராவின் பெயரை தொடர்ந்து 2-வது ஆண்டாக கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்திருப்பதை தேசிய டேபிள் டென்னிஸ் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.பி.சிங் உறுதி செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 24 வயதான மனிகா பத்ரா 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியவர் ஆவார். அத்துடன் அந்த காமன்வெல்த் விளையாட்டில் மேலும் 3 பதக்கங்களும் அறுவடை செய்து பிரமிக்க வைத்தார். ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். மதுரிகா பத்கர், மனவ் தக்கர், சுதிர்தா முகர்ஜீ ஆகியோரது பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் - இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்
நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் என இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் கூறினார்.