கொரோனா பாதிப்பால் சர்வதேச குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர்கள்


கொரோனா பாதிப்பால் சர்வதேச குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர்கள்
x
தினத்தந்தி 7 March 2021 11:43 PM GMT (Updated: 7 March 2021 11:43 PM GMT)

35-வது பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டின் கேஸ்டில்லோனில் நடந்தது.

35-வது பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டின் கேஸ்டில்லோனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு இறுதி சுற்றில் களம் இறங்க இருந்த இந்திய வீரர் ஆஷிஷ் குமாருக்கு (75 கிலோ பிரிவு) போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரும், ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சக இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுத்தின் (57 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ) ஆகியோரும் போட்டியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. இறுதி ஆட்டத்தில் ஆட முடியாமல் போனதால் 3 பேரும் வெள்ளிப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஹூசாமுத்தின், சங்வானுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்ததால் அவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள். அதே சமயம் ஆஷிஷ் குமார் அங்கு 2 வாரம் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்த பிறகே நாடு திரும்ப முடியும். இதே போல் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை (60 கிலோ) எதிர்த்து அரைஇறுதியில் ஆடிய கிரியா தாபியாவுக்கு (பியூர்டோரிகோ) கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் வேறு வழியின்றி சிம்ரன்ஜித் கவுர் இறுதி ஆட்டத்தில் ஆடமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story