தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் ஏ.கே.சித்திரைபாண்டியன் காலமானார் சொந்த ஊரில் இன்று உடல் அடக்கம்


தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் ஏ.கே.சித்திரைபாண்டியன் காலமானார் சொந்த ஊரில் இன்று உடல் அடக்கம்
x
தினத்தந்தி 13 March 2021 4:46 AM GMT (Updated: 13 March 2021 4:46 AM GMT)

தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனுமான ஏ.கே.சித்திரைபாண்டியன் சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

சென்னை, 

முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும், தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனுமான ஏ.கே.சித்திரைபாண்டியன் சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. நெல்லை பிரண்ட்ஸ் கிளப் செயலாளர், டாக்டர் சிவந்தி கிளப் தலைமை செயல் அதிகாரி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 1980 முதல் 1985-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கைப்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். தேசிய சீனியர் போட்டியில் இந்தியன் ரெயில்வே அணிக்காக 6 முறையும், தமிழக அணிக்காக 8 முறையும் விளையாடி இருக்கிறார். அத்துடன் தமிழக அணியின் கேப்டன் பொறுப்பை 2 முறை வகித்துள்ளார். சென்னை மாநகராட்சி, ஐ.சி.எப்., ஐ.ஓ.பி. அணிகளுக்காகவும் ஆடி இருக்கிறார். கைப்பந்து போட்டியில் தலைசிறந்த ஷெட்டராக முத்திரை பதித்த ஏ.கே.சித்திரைபாண்டியன் விளையாட்டில் மட்டுமின்றி நிர்வாகத்திலும் சிறந்து விளங்கினார். அவரது திறமையான நிர்வாகத்தால் பல்வேறு வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். நெல்லை பிரண்ட்ஸ், டாக்டர் சிவந்தி கிளப் மூலம் மாணவ-மாணவிகளுக்கு இலவச கைப்பந்து பயிற்சி முகாம்களை நடத்தி பாராட்டு பெற்றுள்ளார். அவரது திடீர் மறைவு செய்தி கேட்டு கைப்பந்து நிர்வாகிகளும், வீரர், வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் உள்ள நெல்லை பிரண்ட்ஸ் கிளப் கட்டிடத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர்கள் ராஜா சங்கர், ஜெயமுருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் பொன். கவுதம சிகாமணி, பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, எஸ்.டி.ஏ.டி. பொதுமேலாளர் (பொறுப்பு) டேனியல் உள்பட பல்வேறு விளையாட்டு நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள முதலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மாலை 4 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஏ.கே.சித்திரைபாண்டியனுக்கு டெய்சி என்ற மனைவியும், எமிமா, ஷிபா ரத்னா ஆகிய மகள்களும் உள்ளனர்.

Next Story