ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல்


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல்
x
தினத்தந்தி 19 March 2021 3:22 AM GMT (Updated: 19 March 2021 3:22 AM GMT)

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல். ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம், 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-8, 21-8 என்ற நேர் செட்டில் லினே கிறிஸ்டோபெர்செனை (டென்மார்க்) பந்தாடி கால்இறுதிக்கு முன்னேறினார். சிந்து கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவர்கள் இருவரும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 10-ல் சிந்துவும், 7-ல் யமாகுச்சியும் வெற்றி கண்டுள்ளனர். இவர்கள் இடையே நடந்த கடைசி 3 ஆட்டங்களில் யமாகுச்சியே வெற்றி பெற்றிருக்கிறார்.

முன்னதாக இந்தியாவின் சாய்னா நேவால் தனது முதலாவது சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட்டை எதிர்த்து ஆடிய போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அப்போது சாய்னா 8-21, 4-10 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். தரவரிசையில் பின்தங்கியதால் ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்த காயம் அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தாமஸ் ரோசலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அதே சமயம் இந்தியாவின் பிரனாய் 15-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். இதே போல் மற்றொரு இந்திய வீரர் சாய்பிரனீத் 21-15, 12-21, 12-21 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோற்று வெளியேறினார்.

Next Story