உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
x
தினத்தந்தி 21 March 2021 12:59 AM GMT (Updated: 21 March 2021 12:59 AM GMT)

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு நாள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இரண்டு இந்தியர்கள் உள்பட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வீரர்கள் மற்றும் இதர வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது.

ஏற்கனவே நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்த மற்றொரு சர்வதேச வீரருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு பக்கம் கொரோனா பிரச்சினை எழுந்தாலும் இன்னொரு பக்கம் துப்பாக்கி சுடுதல் போட்டி இடையூறு இன்றி நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் பதக்க கணக்கை 18 வயதான திவ்யனாஷ் சிங் பன்வார் நேற்று தொடங்கி வைத்தார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி சுற்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான திவ்யனாஷ் பன்வார் மொத்தம் 228.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து பதக்கமேடையில் ஏறினார்.

அமெரிக்காவின் லுகாஸ் கோஸினிஸ்கி தங்கப்பதக்கமும் (249.8 புள்ளி), ஹங்கேரியின் இஸ்ட்வேன் பெனி (249.7 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில் 187.8 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் யஷாஸ்வினி சிங் தேஸ்வால், மானு பாகெர் இலக்கை துல்லியமாக சுட்டு பிரமாதப்படுத்தினர். அரியானாவைச் சேர்ந்த 23 வயதான யஷாஸ்வினி 238.8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். மானு பாகெர் 236.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் 18 வயதான சவுரப் சவுத்ரி மயிரிழையில் தங்கப்பதக்கத்தை நழுவ விட்டார். அவர் 243.2 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஈரான் வீரர் 41 வயதான ஜாவித் போரோக்கி 243.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 221.8 புள்ளிகளுடன் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

Next Story