நெல்லை பல்கலைக்கழக தடகள போட்டிகள்- 900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தடகள போட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32-வது ஆண்டு தடகளப் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கனைச் சேர்ந்த சுமார் 74-க்கும் மேற்பட்ட உறுப்புக்கல்லூரிகளில் இருந்து 900-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

100 மீட்டர், 110 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர்், 10 ஆயிரம் மீட்டர், 20 ஆயிரம் மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தய போட்டிகளும் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், முன்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடந்தன.

வெற்றி பெற்றவர்கள்

போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை மாணவர்கள் பிரிவில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி முதல் இடத்தையும், நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும், மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி அணி மூன்றாவது இடத்தையும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணி நான்காவது இடத்தையும் பெற்றன.

அதே போல் பெண்கள் பிரிவில் வடக்கன்குளம் - சகாய தாய் பெண்கள் கல்லூரி அணி முதல் இடத்தையும், நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி மூன்றாவது இடத்தையும், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி அணி நான்காவது இடத்தையும் தட்டிச்சென்றன.

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் அண்ணாத்துரை தலைமை தாங்கி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பேசினார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் கிருஷ்ணசக்கரவர்த்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிதி அலுவலர் மரிய ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னதாக இப்போட்டியின் அமைப்பு செயலாளரான துரை வரவேற்றுப் பேசினார்.

முடிவில் மனோன்மனியம் சுந்தரனார். பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story