அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 5 Sep 2021 12:50 AM GMT (Updated: 2021-09-05T06:20:05+05:30)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-0, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பாப்லோ ஆன்ட்ஜரை (ஸ்பெயின்) எளிதில் விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 55-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-3, 4-6, 7-6 (7-2), 0-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) 4 மணி 6 நிமிடம் போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அவரது டென்னிஸ் வாழ்க்கையில் ருசித்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதன் மூலம் 1992-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்ற இளம் வயது வீரர் என்ற பெருமையை 18 வயதான கார்லோஸ் அல்காரஸ் தனதாக்கினார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 3-6, 6-7 (6-8), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் 50-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாபோவிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஒசாகா கண்ணீர்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 73-ம் நிலை வீராங்கனையான 18 வயது லேலா பெர்னாண்டசை (கனடா) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய ஒசாகா 2-வது செட்டை டைபிரேக்கரில் பறிகொடுத்தார். இதனால் அடுத்த செட்டில் உத்வேகத்துடன் செயல்பட்ட லேலா பெர்னாண்டஸ் அதனை கைப்பற்றியதுடன் பட்டத்தை தக்க வைக்கும் ஒசாகாவின் ஆசைக்கும் ஆப்பு வைத்தார். 2 மணி 4 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் லேலா பெர்னாண்டஸ் 5-7, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றை எட்டினார். ஏமாற்றத்தை தாங்க முடியாத ஒசாகா ஆத்திரத்தில் தனது பேட்டை ஓங்கி அடித்து உடைத்தார்.

தோல்விக்கு பிறகு நவோமி ஒசாகா கண்ணீர் மல்க கூறுகையில், ‘இந்த தோல்வி குறித்து வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக உணருகிறேன். அடுத்து நான் எப்போது டென்னிஸ் விளையாட போகிறேன் என்பது தெரியவில்லை. டென்னிஸ் ஆட்டத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்று சிந்திக்கிறேன்’ என்றார். 23 வயதான ஒசாகா மனஅழுத்தம் காரணமாக கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இருந்து விலகினார். அடுத்து நடந்த விம்பிள்டன் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்பின் முகுருஜா முன்னேற்றம்

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 4-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சபலென்கா (பெலாரஸ்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு ஏற்றம் கண்டனர்.

சானியா ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்க வீரர் ராஜீவ் ராம் ஜோடி, மேக்ஸ் புர்செல் (ஆஸ்திரேலியா)- யாஸ்ட்ரிம்ஸ்கா (உக்ரைன்) இணையை சந்தித்தது. 61 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சானியா கூட்டணி 3-6, 6-3, 7-10 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது.

Next Story