சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : @CincyTennis twitter

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், மெட்விடேவ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சின்சினாட்டி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 23-ம் நிலை வீரரான டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் முதல்செட்டை கைப்பற்றிய நிலையில் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிடோவிச் போகினா போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 18-ம் நிலை வீரரான முசேட்டியை (இத்தாலி) ஊதித்தள்ளினார். 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) 4-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்லிடம் வீழ்ந்தார். இதேபோல் 6-ம் நிலை வீரரான யானிக் சின்னெர் (இத்தாலி) 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் டசன் லாஜோவிச்சிடம் (செர்பியா) அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

மற்ற ஆட்டங்களில் சிட்சிபாஸ் (கிரீஸ்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), டாமி பால் (அமெரிக்கா), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.


Next Story