விடை பெறுகிறது 17-வது மக்களவை


விடை பெறுகிறது 17-வது மக்களவை
x

17-வது மக்களவை கூட்டம் முடிவடையும் சூழ்நிலையில் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் சொன்னது போல அடுத்த 100 முதல் 120 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் 17-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. இனி 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதியையும், எத்தனை கட்டங்களாக நடக்கும் என்பதையும் விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்க இருக்கிறது.

17-வது மக்களவை கூட்டம் முடிவடையும் சூழ்நிலையில் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த 17-வது மக்களவை பல சாதனைகளையும், வரலாற்றையும் படைத்து இருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலமும் துணை சபாநாயகர் இல்லாமலேயே இந்த மக்களவை தன் பதவி காலத்தை முடிக்கிறது. பொதுவாக மக்களவையில் சபாநாயகர் இருப்பார். இந்த மக்களவையில் பா.ஜனதாவில் இருந்து ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். அதுபோல துணை சபாநாயகராகவும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். துணை சபாநாயகர் எதிர்க்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. ஆனால் இந்த மக்களவையில் துணை சபாநாயகராக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி அந்தஸ்தும் எந்த கட்சிக்கும் இல்லை. அதாவது மொத்த உறுப்பினர்களில் 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. இந்த மக்களவையில் பல முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பேசிக்கொண்டிருந்த பெண்கள் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு 27 வார மகப்பேறு விடுமுறை, தேவையில்லாத பழங்கால சட்டங்கள் ரத்து, புதிய குற்றவியல் சட்டங்கள், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து போன்ற பல முக்கியமான மசோதாக்கள் உள்பட 222 மசோதாக்கள் இந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது.

கடைசியில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் இந்த மக்களவை கூட்டம் நடந்தது. இதுவரையில் இருந்த 16 மக்களவையை காட்டிலும் இந்த 17-வது மக்களவையில்தான் இளைஞர்கள் அதிகமாக உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 54 ஆகும். 70 வயதை கடந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. 40 வயதுக்கு குறைவான உறுப்பினர்களே அதிகமாக இருக்கிறார்கள். பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த சந்திராணி முர்மு 25 வயதில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 543 உறுப்பினர்களில் இப்போது 20 உறுப்பினர்கள் பதவியிடம் காலியாக இருக்கிறது. 400 உறுப்பினர்கள் பட்டதாரிகள். ஆனால் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாக 77 தான் இப்போது இருக்கிறது. வருகிற மக்களவையில் அதிக பெண்கள் இடம் பெறுவார்கள் என்று தன் நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுபோல இந்த 5 ஆண்டுகளில் இதுவரையில் இல்லாத அளவு மிகக் குறைவாக 272 அமர்வுகளில்தான் மக்களவை நடந்துள்ளது. அடுத்து வரும் மக்களவை கூடுதலான அமர்வுகளில் நடக்க வேண்டும், மக்கள் பிரச்சினைகள் அதிகளவில் விவாதிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது.


Next Story