அனைத்து இந்து கோவில்களிலும் தலபுராணங்கள்!


அனைத்து இந்து கோவில்களிலும் தலபுராணங்கள்!
x

இந்து மதம் என்பது பழம்பெரும் மதமாகும். இன்றைக்கு தமிழ்நாட்டில் கோவில் இல்லாத ஊர்களே இல்லை.

இந்து மதம் என்பது பழம்பெரும் மதமாகும். இன்றைக்கு தமிழ்நாட்டில் கோவில் இல்லாத ஊர்களே இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தல புராணம், தல விருட்சம் என்று கூறப்படும் தல மரம் கண்டிப்பாக உண்டு. பல கோவில்களில் திருக்குளம், நந்தவனங்களும் இருக்கிறது. தல புராணம் என்பது, அந்த கோவில் உருவாக்கப்பட்டதன் காரணம், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பெருமை, அந்த தெய்வத்தை வழிபட்டு நலம்பெற்றவர்களுடைய வரலாறு, வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேஷங்கள் முதலியவற்றை கூறுவதாக இருக்கும்.

தல விருட்சம் என்றால், அங்குதான் அந்த கோவிலின் மூலவரே உருவாகியிருப்பார். அந்த தலம் உருவாக காரணமாக இருப்பதுதான் தல விருட்சம். தொன்றுதொட்டு இந்த தல மரங்கள் இறைவன் - இறைவியை குறிக்கும் சின்னங்களாகவும், பல்வேறு பூஜைகளின் அங்கமாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு கோவிலின் தல புராணத்தையும், தல விருட்சத்தையும் அறிவதன் மூலமாகத்தான் அந்த கோவிலின் முக்கியத்துவமே தெரியும்.

சமீபத்தில் வரலாற்றிலும், புராணங்களிலும் சிறப்பிடம் பெற்ற, மதுராந்தகத்திலுள்ள வைணவ திருக்கோவிலான ஸ்ரீ கோதண்டராமர் என்னும் ஏரி காத்த ராமர் கோவிலில், ஆனி பிரமோற்சவம் மற்றும் தேரோட்டம் நடந்தது. இந்த கோவிலின் தல புராணத்தை பார்த்தால் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த ஊரிலுள்ள பரந்த ஏரியான மதுராந்தகம் ஏரி, சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியில் அடிக்கடி நீர் நிரம்பிவழிந்து, கரை உடைந்து, அந்த ஊரே வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அதாவது 1795-98-ம் ஆண்டுகளில், மதுராந்தகம் ஏரி நிரம்பி, ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலை மூழ்கடித்தது. இதனால், கோவிலில் தாயார் ஜனகவள்ளி சன்னதி சேதமடைந்தது. அப்போது, செங்கல்பட்டு கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர், "இந்த கோவிலில் குடிகொண்டுள்ள ராம பிரானும், தாயார் ஜனகவள்ளியும் ஏரி உடையாமல் காப்பாற்றினால், கோவில் திருப்பணியை செய்து தருகிறேன்" என்று வாக்குறுதி அளித்தார். அன்று இரவே பெரும் மழை பெய்து ஏரி உடையும் சூழல் ஏற்பட்ட நேரத்தில், கலெக்டர் லயனல் பிளேஸ் கையில் குடையுடன் ஏரிக்கரையில் நடந்துசென்று பார்வையிட்டார். அப்போது அவர் கண்ணில் ராமர், லட்சுமணர் கையில் வில்-அம்பு ஏந்தி, ஏரிக்கரையை உடையாமல் காத்துக்கொண்டிருந்த காட்சி தென்பட்டது.

இதுகுறித்து மிகவும் அதிசயத்தோடு அவர் எழுதிய குறிப்புகள் இன்றும் சென்னையிலுள்ள ஆவண காப்பகத்தில் இருக்கிறது. தான் வாக்குறுதி அளித்ததை காப்பாற்றும் வகையில், லயனல் பிளேஸ், தாயார் ஜனகவள்ளிக்கென தனி கோவிலை கட்டினார். இன்றும் அந்த கோவிலில், அவர் கட்டியதற்கான குறிப்பு உள்ளது. இதுபோல, ஒவ்வொரு கோவில் கட்டியதற்கும் பின்னால், ஒரு வரலாறு இருக்கிறது. அதை வருங்கால சந்ததிகள் தெரிந்துகொள்ளும் வகையில், பெரிய அளவில் பதிவு செய்யப்படவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களிலும் புன்னை, மகிழம், அரசு, ஆல், மா, அத்தி, வேம்பு, வில்வம், வாழை, புங்கை, கொய்யா, நெல்லி, வன்னி, செண்பகம் உள்பட 70 வகையான தல மரங்களை நடுவதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். 7-8-2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில், நாகலிங்க மரக்கன்றை நட்டு, இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இப்போது ஒரு லட்சம் மரக்கன்றுகளும் திருக்கோவில்களில் நடப்படும் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அந்த மரக்கன்றுகள் செழித்து வளருவதையும் கோவில் நிர்வாகம் உறுதிசெய்யவேண்டும். தல மரக்கன்று நட்டு சிறப்பு பெற்ற தமிழக அரசு, அனைத்து கோவில்களிலும், தல புராணங்களை எழுதிவைத்த பெருமையையும் பெறவேண்டும்.


Next Story