ஜெயலலிதாவை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஜெயலலிதாவை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக கவர்னர் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக கவர்னர் இருக்கிறார். துணைவேந்தர்களாக அரசு நியமிக்கும் தேடுதல்குழு பரிந்துரை செய்யும் பட்டியலில் இருந்து ஒருவரை வேந்தர் என்ற முறையில் கவர்னர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார். இணைவேந்தராக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இருக்கிறார். இதுதவிர, தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு மட்டும் கவர்னர், வேந்தராக இல்லை. முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கிறார். கவர்னராக இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் இருந்தபோதும், இப்போது கவர்னராக ஆர்.என்.ரவி இருக்கும்போதும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கும், கவர்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் வகையில், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நீண்டகாலமாக கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு, சுப்ரீம்கோர்ட்டு கதவுகளைத் தட்டியது. அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வரும்முன்பு கவர்னர் இந்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்து திருப்பி அனுப்பினார். உடனே தமிழக அரசு சிறப்பு சட்டசபையைக்கூட்டி அதே மசோதாக்களை மறுபடியும் நிறைவேற்றி அனுப்பியது. அரசியல் சட்டப்படி கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தாகவேண்டும். இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக, கேரள கவர்னர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனங்களை தெரிவித்தது. ஆக தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதல்-அமைச்சரே வேந்தராக ஆகுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் வேந்தராக உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும், இசை அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசும்போது, "இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. மற்றொரு சிறப்பு, இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் உரிமை இருக்கிறது. இப்படி முதல்-அமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளரமுடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துதான், 2013-ம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல்-அமைச்சர்தான் என்று அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கும் நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்'' என்று பேசினார்.

இதுதான் அரசியல் நாகரிகம். இத்தகைய அரசியல் நாகரிகம் தமிழ்நாட்டில் தழைத்து வரவேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் இருந்த அதே அரசியல் நாகரிகம் இப்போது உயிர்பெற்றுவிட்டது. ஜெயலலிதாவை அம்மையார் என்று அழைத்து, அவரை மனதார வெளிப்படையாகவே பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலை மக்கள் போற்றுகிறார்கள். அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இத்தகைய அரசியல் நாகரிகம் வளரவேண்டும். அதைத்தான் 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்று அறிஞர் அண்ணா சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.


Next Story