நன்மைகளை அள்ளிக்கொண்டு வரும் தீபாவளி!


நன்மைகளை அள்ளிக்கொண்டு வரும் தீபாவளி!
x

மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி.

மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக்கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்துக்களைப் பொருத்தமட்டில் இது தீப ஒளி திருநாள். வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டுவரும் நாள்.

யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே இவனை அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு, மிகவும் சமயோஜிதமாக சத்தியபாமாவை அம்பெய்த வைத்து கொன்ற நாள்தான் தீபாவளி. தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்றும், வட மாநிலங்களில் ராமபிரான் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சீக்கியர்கள் 1577-ல் பொற்கோவில் கட்டுமான பணிகள் தொடங்கிய நாளை தீபாவளியாக மகிழ்வுடன் கொண்டாடுகிறார்கள். சமணர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகர அரண்மனை முன்பு விடிய விடிய மக்களுக்கு நல்வழி காட்டும் போதனைகளைக் கூறிவிட்டு, இறைநிலை அடைந்த நாள் இது. ஓளியான மகாவீரரை மக்கள் தங்கள் மனதில் வைத்து, வழிபடும் பொருட்டு அவர் முக்தி அடைந்த இந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடவேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். அன்று முதல் சமணர்கள் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளிலும் தீபாவளி நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. நியூயார்க் நகரிலுள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் தொடங்கப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் கூட்டம் அலைமோதியது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன் மனைவியுடன் இன்று தீபாவளியை கொண்டாடுகிறார்.

இது மகிழ்ச்சி திருநாள், தீமை என்ற இருள் அகன்று நன்மை என்ற ஒளி பிரகாசிக்கும் நாள் என்பதுதான் அனைத்து மதங்களும் இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவதன் கருப்பொருள். தீபாவளியை கொண்டாடுபவர்களின் வாழ்வில் மட்டும் மகிழ்ச்சியில்லை, பட்டாசு தயாரிக்கும், விற்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள், கடைக்காரர்கள், பலகாரங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை தயாரிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் என்று எல்லோருக்கும் வருமானம் தரும், வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுக்கும் இந்த விற்பனையால் வரி வருவாய் கிடைக்கும் என்று எல்லா வகையிலும் வளத்தை அள்ளிக்கொண்டு வரும் நாள் தீபாவளி. இருள் அகலும் இந்த நாளில், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உற்பத்தி குறைவு, விவசாயிகளின் வருமான இழப்பு என்பது போன்ற இருள் அகன்று அனைத்து நன்மைகளும் அள்ளிக்கொண்டு வரும் ஒளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்கவேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.


Next Story