வெளிநாட்டு வேலைக்கு அரசாங்கமே அனுப்ப வேண்டும்


வெளிநாட்டு வேலைக்கு அரசாங்கமே அனுப்ப வேண்டும்
x

“திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது மூதாதையர் கற்றுத்தந்த பாடமாகும்.

"திரை கடலோடியும் திரவியம் தேடு" என்பது மூதாதையர் கற்றுத்தந்த பாடமாகும். 1960, 1970-ம் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பல ஊர்களில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த பலர், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு சென்று வேலை பார்த்ததால், கணிசமான வருவாய் ஈட்டியதன் காரணமாக, குடிசை வீடுகளெல்லாம் மாடி வீடுகளாகின. அவர்கள் குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்பட்டது. ஏழ்மை அவர்களைவிட்டு ஓடியது.

இதன் காரணமாக, இளைஞர்களின் கனவெல்லாம், 'வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கவேண்டும்' என்பதாகவே இருந்தது. காலப்போக்கில் பல போலி நிறுவனங்கள், 'நாங்கள் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புகிறோம்' என்று பணம் கறந்தன. தருவதாக சொன்ன வேலை ஒன்று, வெளிநாடுகளில் கொடுத்த வேலை வேறொன்று என்ற நிலையே இருந்தது. வீட்டு வேலைக்கு என்று சொல்லி அனுப்பப்பட்ட பல பெண்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகினர்.

சமீபத்தில் இவ்வாறு ஏமாற்றப்பட்ட ஒருவர், சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துகுமரன் என்பவர் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி அதை ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொடுத்து, குவைத் நாட்டில் சேல்ஸ்மேன் வேலை வேண்டும் என்று சென்றார். ஆனால் அங்கு பாலைவனத்துக்கு சென்று ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்து, பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் என்பதற்காக, அவரை வேலைக்கு அமர்த்திய முதலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார்.

இதுமட்டுமல்லாமல், தாய்லாந்து நாட்டுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 இளைஞர்கள் உள்பட 300 இந்தியர்களை துப்பாக்கி முனையில் மியான்மர் நாட்டுக்கு கடத்திசென்று, அங்கு 'ஆன்லைன்' மூலம் பணமோசடி செய்யும் வேலைகளில் ஈடுபட வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சட்டவிரோத செயலை செய்ய மறுப்பவர்களை பெருந்துயருக்கு ஆளாக்குகிறார்கள். இதில், பெண்களும் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 'எங்களை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சுபவர்களிடம், 6 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்கிறார்கள்.

அதன்படி, மியான்மரில் இருந்து ரூ.5 லட்சம் பிணைத்தொகை கொடுத்து, உயிர் தப்பிவந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஆசிப் என்ற வாலிபரின் உருக்கமான பேட்டி தினத்தந்தியில் வெளிவந்துள்ளது. மியான்மரில் கொடுமைக்கு ஆளாகி தவிப்போரை மீட்க, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழக இளைஞர் சமுதாயத்துக்கு இவ்வாறான கொடுமைகள் நிகழ்வதை தடுக்கவேண்டும் என்றால், வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை, என்ன வகையான வேலை? எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள்?, என்னென்ன வசதிகள்? என்பதை அந்த நாட்டுடன் உறுதிசெய்து, கேரளாவைப்போல தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

வளைகுடா நாடுகளில் கேரளாவை சேர்ந்த நர்சுகள் ஏராளமாக வேலை பார்க்கிறார்கள். இப்போது ஐரோப்பிய நாடுகளை தொடர்புகொண்டு, தங்கள் மாநில நர்சுகளுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை கேரள அரசே பெற்றுத்தர தொடங்கியுள்ளது. கேரளாவில் ஆண்டுக்கு 8,500 பேர் நர்சிங் படித்து பட்டம் பெறுகிறார்கள். இதில் 60 முதல் 70 சதவீதம் பேர் முதல் ஆண்டிலேயே வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார்கள். கேரளாவில் படித்த 30 சதவீத நர்சுகள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளிலும், 15 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவிலும், 12 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேலை பார்க்கிறார்கள்.

தமிழக அரசு நிறுவனமும் கேரள அரசைப்போல இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து, அனைத்து நாடுகள் மற்றும் அங்குள்ள முன்னணி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தமிழக இளைஞர்களையும், இளம்பெண்களையும் வேலைக்கு அனுப்பினால், எந்த ஏமாற்றத்துக்கும் ஆளாகாமல் நல்ல நிலையை அடைய முடியும் என்கிறார்கள் தமிழக இளைஞர்கள்.


Next Story