இந்திய தேசிய கொடியில் சீனா தயாரிப்பு என்ற வாசகமா?


இந்திய தேசிய கொடியில் சீனா தயாரிப்பு என்ற வாசகமா?
x

இந்திய தேசிய கொடி ஒவ்வொரு இந்தியனின் பெருமை மட்டுமல்ல, நாட்டின் பெருமையுமாகும். ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் தேசிய கொடிதான் முன்னால் நிற்கும்.

இந்திய தேசிய கொடி ஒவ்வொரு இந்தியனின் பெருமை மட்டுமல்ல, நாட்டின் பெருமையுமாகும். ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் தேசிய கொடிதான் முன்னால் நிற்கும். சர்வதேச நாடுகளின் மாநாட்டில் பிரதமர் உள்பட நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும்போது, அவர்களின் மேஜையின் முன்னால் நம் நாட்டின் தேசிய கொடிதான் மதிப்புமிகு அங்கீகாரமாக இருக்கும்.

குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தன்றும் ஜனாதிபதியும், பிரதமரும் தேசிய கொடியை ஏற்றிவைத்துத்தான் உரையாற்றுவார்கள். இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டாகும். இதை அமிர்த பெருவிழாவாக கொண்டாடி நாடு பூரிப்படைகிறது. இந்த நாளையொட்டி, 'இல்லம்தோறும் தேசிய கொடி' என்ற வகையில், அனைவரும் தங்கள் இல்லத்தின்முன் தேசிய கொடியை 3 நாட்கள் ஏற்றி வைக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளையேற்று, பெரும்பாலான இல்லங்களில் தேசிய கொடி பறந்தது கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

இதுமட்டுமல்ல, எண்ணற்ற மக்கள் தங்கள் சட்டையில் தேசிய கொடியை குத்தி நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்தனர். இந்த தேசிய கொடிக்கென நீண்ட வரலாறு உண்டு. இந்திய நாட்டின் நீண்டகால சுதந்திர போராட்டத்தின் அடையாளமாக தேசிய கொடி திகழ்கிறது. சுதந்திர போராட்டத்தின்போது, போராடும் இயக்கங்களை ஒருங்கிணைக்க ஒரு கொடியின் தேவையை தலைவர்கள் உணரத்தொடங்கியதால்தான், 1904-ல் முதன் முதலாக சுவாமி விவேகானந்தரின் அயர்லாந்து சீடரான சகோதரி நிவேதிதையால் வடிவமைக்கப்பட்டு, பின்பு பல்வேறு கால கட்டங்களில் பல மாற்றங்களைக் கண்டது. 1931-ல் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பிங்களி வெங்கையா என்பவர் காவி, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களுடன் மத்தியில் ராட்டினத்துடன் ஒரு புதிய கொடியை உருவாக்கினார்.

1947-ல் இந்திய விடுதலை போராட்ட குழுவினர் தேசிய கொடியை ஒருமனதாக ஏற்றனர். மத்தியில் இருந்த ராட்டினத்துக்கு பதிலாக அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் வரையப்பட்டது. 22-7-1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியபோது, இந்த கொடி இந்திய தேசிய கொடியாக அறிவிக்கப்பட்டு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக ஏற்றப்பட்டு, அன்று முதல் இன்றுவரை இந்தியாவின் சீர்மிகு சின்னமாக, இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட மேன்மைமிகு இந்திய கொடியில் 'மேட் இன் சைனா' அதாவது 'சீனாவில் தயாரிக்கப்பட்டது' என்று எழுதியிருந்தது ஒவ்வொரு இந்தியனையும் வேதனைப்படுத்துகிறது.

சமீபத்தில் கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், தமிழக சபாநாயகர் அப்பாவு உள்பட மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர். இந்திய குழுவினர் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு சென்ற தேசிய கொடியில்தான் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. இது எப்படி நமது அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் இருந்தது?, இது ஓம் பிர்லா கவனத்துக்கு மாநில சபாநாயகர்களால் கொண்டு போகப்பட்டது. இதுகுறித்து தமிழக சபாநாயகர் அப்பாவு கூறும்போது, "தேசிய கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக சிவகாசி, கரூர், நாமக்கல் போன்ற இடங்களில் இரவு ஆர்டர் கொடுத்தால் அடுத்த நாள் காலையில் கொடுத்து விடக்கூடிய அச்சகங்கள் இருக்கின்றன" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த காமன்வெல்த் மாநாடு கனடாவில் நடந்தது. கனடா நாடு இந்த மாநாட்டுக்காக காமன்வெல்த் நாடுகளின் கொடிகளை, சீனாவில் இருந்து வாங்கி கொடுத்து இருந்தாலும், அப்பாவு உள்பட இந்தியாவின் மாநிலங்களில் இருந்து சென்ற சபாநாயகர்களும், ஏன் இந்திய மக்களும் நம் தேசிய கொடியில் 'மேட் இன் சைனா' என்று பொறிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அடையும் வருத்தம் நியாயமான ஒன்றுதான்.


Next Story