மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூல்


மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூல்
x

தமிழ்நாட்டில் கடந்த 10-ந்தேதி முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10-ந்தேதி முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைப்பு, சமையல் கியாஸ் விலை உயர்வு என்று எல்லா பக்கங்களிலும் இருந்துவந்த தாக்குதலால், வாழ்க்கை சக்கரம் சுழல பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் மக்களை, இப்போது உயர்ந்திருக்கும் மின்சார கட்டணமும் சேர்ந்து பெரும்பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. தொட்டால் மட்டுமல்ல, இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணமும் 'ஷாக்' அடிக்கிறது என்பதே மக்கள் கருத்து.

மின்சார கட்டணத்தை 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லாத காரணத்தால், உயர்த்தப்பட்டு இருப்பதாக மின்சார வாரியத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பானது 31-3-2021 அன்றுவரை ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், அன்றைய தேதியில் மின்சார வாரியத்துக்கு மொத்த கடன் நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடியாக உள்ளது. இதற்காக ஆண்டுக்கு வட்டி ரூ.16 ஆயிரத்து 511 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், மின் கட்டண திருத்தம் என்பது மத்திய அரசாங்க திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய முன் நிபந்தனையாகும் என்றும், மின்சார வாரியம் அறிவித்துள்ளது. என்றாலும், இந்த உயர்வு அதிகமாகவே இருக்கிறது என்பது பொதுவான கருத்தாகும். மாதாமாதம் மின்சார கட்டண 'பில்' கட்டும்போது, ரூ.55-ல் இருந்து ரூ.1,470 வரை (ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர்) அதிகமாக கட்டவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 36 லட்சம் மின் நுகர்வோர் இருக்கிறார்கள். இதில் வீடுகளில் இலவச மின்சாரம் பெறும் 98 லட்சம் பேரைத்தவிர மீதியுள்ள அனைவரும் இந்த கட்டண உயர்வின்படி, புதிய கட்டணத்தை கட்டவேண்டும். இது மட்டுமல்லாமல், புதிய மின் இணைப்புக்கான கட்டணம், மீட்டர் இருக்கும் இடத்தை மாற்றுவது, பழுதான எரிந்துபோன மீட்டரை மாற்றுவது போன்ற சிறு சிறு சேவைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களெல்லாம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மீட்டர்களுக்கான வைப்புத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மட்டுமல்ல, பெரிய, சிறு தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலை கட்டணம் இருமடங்காக கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்தும் சிறு நிறுவனங்கள் இதுவரை கட்டிய ரூ.1,750 தொகை இனி ரூ.3,750 ஆக கட்டும்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்போது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் 'பீக்' அவர், அதாவது நெரிசல் நேரம் என்பது காலையும், மாலையும் 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு, அந்த நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு, நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு. கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல.. மெல்ல.. எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்த மின்சார கட்டண உயர்வு பழைய நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும் என்கிறார், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தலைவர் கே.மாரியப்பன். இதுமட்டுமல்லாமல், இந்த கட்டண உயர்வு இந்த ஆண்டோடு நிற்கவில்லை. இனி ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீத கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.

இப்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான மாதந்தோறும் மின்சார கட்டணத்தை கட்டும் முறை உடனடியாக வரவேண்டும் என்பதுதான் மக்கள் எதிர்பார்க்கும் ஒன்று. இந்த முறை அமலுக்கு வந்தால், இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வின் வலி நிச்சயமாக குறையும். அது தாங்கிக்கொள்ளக்கூடிய வலியாக இருக்கும் என்றும் மக்களிடம் கருத்து நிலவுகிறது.


Next Story