ஆறுதல் அளிக்கும் ரூ.1,000 கோடி நிவாரணம்!


ஆறுதல் அளிக்கும் ரூ.1,000 கோடி நிவாரணம்!
x

சில சோக நிகழ்வுகள் எந்தக்காலத்திலும் மறக்கமுடியாது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரழிவால் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்னும் மாறவில்லை.

சில சோக நிகழ்வுகள் எந்தக்காலத்திலும் மறக்கமுடியாது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரழிவால் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்னும் மாறவில்லை. அதுபோல 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல 2023-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் மக்கள் பட்ட அவதி காலாகாலத்திலும் மறக்க முடியாத நிகழ்வாகும். டிசம்பர் 3, 4-ந்தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. அடுத்து 17, 18-ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த பேய் மழையினால் பெரும் வெள்ளத்தோடு கடும் சீர்குலைவு ஏற்பட்டது.

இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள இன்னும் சில காலம் ஆகும். சாலைகள், பாலங்கள், ஏரிகள், குளங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் என்று பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் சீர்செய்ய அரசுக்கு பெரும் நிதி வேண்டும். சற்று காலமும் ஆகும். ஆனால் அரசு உடனடியாக அத்தனை பணிகளையும் தொடங்கிவிட்டது. மக்களோ தங்கள் வீடுகள், உடைமைகள், வாகனங்களை இழந்து தவிக்கிறார்கள். விளைநிலங்களெல்லாம் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதமாகிவிட்டன. கால்நடைகள், கோழிகளெல்லாம் அடித்து செல்லப்பட்டுவிட்டன. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் வந்து பார்த்தார். அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டனர்.

மக்கள் புதுவாழ்வு தொடங்கும் வகையில் மத்திய அரசாங்க நிதி வரும் வரை காத்திருக்காமல், தமிழக அரசு தன் சொந்தநிதியில் இருந்து ரூ.1,000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதியாக சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும். 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல இந்த 8 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இழப்பீடு வழங்கவும், தூத்துக்குடி, நெல்லை, மாவட்டங்களில் விவசாய-விளை நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு படிந்துள்ள மண்ணை அகற்றவும், கட்டணமின்றி பணிகளை வேளாண் பொறியியல்துறை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல சேதமடைந்த 4,928 மீன்பிடி படகுகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உயிரிழந்த 17 ஆயிரம் கால்நடைகளுக்கும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளுக்கும் இழப்பீடுதொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. இதில் இவ்வளவு பேருக்குத்தான் இழப்பீடு என்று வரம்பு நிர்ணயிப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். இதை பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இதுபோல வீடுகளில் பொருட்களை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சைக்கிள், மின்விசிறிகள், மிக்சி, கிரைண்டர், கட்டில், படுக்கை, உடைகள் போன்றவற்றை இழந்தவர்கள் ஏராளம்.


Next Story