தமிழ்நாட்டில் டெஸ்லா கார் தொழிற்சாலை


தமிழ்நாட்டில் டெஸ்லா கார் தொழிற்சாலை
x

மோட்டார் வாகன தொழிலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மின்சார வாகன உற்பத்தியில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கிறது.

மோட்டார் வாகன தொழிலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மின்சார வாகன உற்பத்தியில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பலர் இப்போது மின்சார வாகனங்களை நாடுகிறார்கள். கடந்த 2022-2023-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது ஒரு பெரிய சாதனையாகும். ஆனால் இதில் 95 சதவீத வாகனங்கள் மூன்று சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள்தான்.

கார் மற்றும் சரக்கு வாகன உற்பத்தியும், பயன்பாடும் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இதற்கு அதிக விலையும் ஒரு காரணம். மேலும் பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் மாநிலம் முழுவதிலும் தேவைக்கேற்ப இன்னும் அமைக்கப்படவில்லை. மின்சார வாகனங்களின் மொத்த விலையில் 40 சதவீதம் பேட்டரியின் விலையிலேயே போய்விடுகிறது. மோட்டார் வாகனங்களுக்கு தேவையான லித்தியம் பேட்டரி உற்பத்தியில் உலக தேவையில் 75 சதவீதம் சீனாவில்தான் இருக்கிறது.

சீன கம்பெனிகளுக்கு அடுத்தப்படியாக கொரிய நாட்டு கம்பெனிகளும், ஜப்பான் நாட்டு கம்பெனிகளும் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் சில இடங்களில் லித்தியம் படிவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுபணிகளை தீவிரப்படுத்தி நம் நாட்டிலேயே லித்தியம் பேட்டரி தயாரிக்கும் நன்னாள்தான் மின்சார வாகன உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் புரட்சியை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பல மின்சார வாகன தொழில்கள் தொடங்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே, உலகிலேயே பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இதுவரை தன் உற்பத்தியையோ, விற்பனையையோ தொடங்கவில்லை.

அமெரிக்கா தவிர டெஸ்லாவின் தொழிற்சாலைகள் சீனாவிலும், ஜெர்மனியிலும் இருக்கின்றன. அடுத்து மெக்சிகோவிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவுக்கு நல்ல செய்தியாக வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகைக்கு எலான் மஸ்க் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதியில் மேலும் ஒரு தொழிற்சாலை தொடங்க திட்டம் இருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, இந்தியா அந்த இடமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அறிவித்துவிட்டார். இதுதொடர்பாக இந்த மாதம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திரமோடியையும் எலான் மஸ்க் சந்திக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியிலேயே எலான் மஸ்க் இந்தியாவில் கார் இறக்குமதிக்கு வரி அதிகமாக இருப்பதை குறிப்பிட்டு இருந்தார். இதற்கு வரி சலுகையும் கேட்டு இருந்தார். மேலும் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கு முன்பு டெஸ்லா கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கவேண்டும் என்று அப்போதே கேட்டு இருந்தார். இப்போது இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால்தடம் பதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதை தங்கள் மாநிலத்துக்கு கொண்டுவர அனைத்து மாநிலங்களும் போட்டிபோடும். எப்படியும் டெஸ்லா கார்தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்க எலான் மஸ்கிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் தமிழக அரசு கோரிக்கை விடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்திக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் மின்சார வாகன தொழிலுக்கு தனி கொள்கை இருப்பதையும் நேரில் சென்று எலான் மஸ்கிடமோ, அவர் நிர்வாகத்திடமோ விளக்கிக்கூற ஒரு குழு அமெரிக்கா செல்வதும் நல்லது. டெஸ்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்கினால் நிறைய பேர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும், தொழில் வளர்ச்சியும் பெருகும்.


Next Story