ராணி மறைந்தார்; மகுடம் நீடூழி வாழ்க!


ராணி மறைந்தார்; மகுடம் நீடூழி வாழ்க!
x

‘இங்கிலாந்து நாட்டில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை’, என்று நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குமொழி உண்டு.

'இங்கிலாந்து நாட்டில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை', என்று நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குமொழி உண்டு. காரணம் அப்போது இங்கிலாந்து 56 நாடுகளை ஆண்டு கொண்டிருந்தது. இப்போது காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படும் 56 நாடுகளும் அந்த காலங்களில் இங்கிலாந்து ஆளுகையில் இருந்தன. அந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் சூரியன் மறையும் நேரத்தில் இந்த 56 நாடுகளில் சில நாடுகளில் சூரியன் உதித்துக் கொண்டு இருந்தது. இப்போது அந்த நாடுகளெல்லாம் சுதந்திரம் அடைந்துவிட்டன. இங்கிலாந்தில் மக்களாட்சி இருந்தாலும் ராஜ வம்சம் தான் அரசின் தலைமையாக இருக்கும். எல்லாமே மன்னர் அல்லது ராணியின் உத்தரவின்பேரில்தான் நடக்கும்.

அதற்கேற்பத்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரசும் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று எலிசபெத் ராணியை மந்திரிசபை அமைக்க அவரது அழைப்பின் பேரில் சந்தித்து ஒப்புதலை வாங்கினார். அடுத்த 3 நாட்களில் தனது 96-வது வயதில் ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து நாட்டில் ஒரு மரபுமொழி சரித்திர காலம் தொட்டு உண்டு. 'தி கிங் இஸ் டெட் ; லாங் லிவ் த கிரவுன்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் இதற்கு 'மன்னர் மறைந்தார்; மகுடம் நீடூழி வாழ்க' என்பது பொருள். அப்படி 70 ஆண்டுகளாக முடிசூடிய பட்டத்து ராணியாக கோலோச்சிய ராணி எலிசபெத் இயற்கை எய்தியுள்ளார். அவர் மறைந்தவுடன் அவரது மகனான 73 வயது சார்லஸ் பட்டத்து மன்னராகவும், அவரது மனைவி கமீலா ராணியாகவும் ஆகியுள்ளார்கள்.

ராணி எலிசபெத் ஆட்சியில் இங்கிலாந்து நாட்டில் சர்ச்சில் முதல் லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்கள் இருந்துள்ளனர். அவரது திருமணம் 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி நடந்தது. அப்போது மகாத்மா காந்தி அவருக்கு திருமணப்பரிசாக தானே நூற்ற நூலினால் ஆன கைக் குட்டையை மவுண்ட்பேட்டன் மூலமாக கொடுத்தனுப்பினார். இந்தியாவில் அனைத்து பிரதமர்களையும் நன்றாக அறிந்தவர் ராணி எலிசபெத். அவரது திருமணத்துக்கு ஐதராபாத் நிஜாம் 300 வைரக்கற்கள் பதித்த ஒரு பிளாட்டின நெக்லசையும் மற்றும் இரு புரூச்சுகளையும் பரிசாக அளித்தார். தன் வாழ்நாளில் இந்த நெக்லசையே ராணி எலிசபெத் விரும்பி அணிந்து வந்தார். அவர் 3 முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். அதில் இருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1961-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சென்னைக்கு வந்த நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இரு மருங்கிலும் நின்று மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியையும், வைஜயந்திமாலா, பத்மினி, ராகினி ஆகியோரின் பரத நாட்டியத்தையும் கண்டு ரசித்தார். பெரம்பூர் ரெயில்பெட்டி தொழிற்சாலைக்கு சென்ற அவர், ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு சென்று, எவ்வாறு சமையல் செய்கிறார்கள்? என்று கேட்டறிந்தார். அடுத்து 1997-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராகவும் இருந்தபோது ராணி எலிசபெத் சென்னை வந்த நேரத்தில் அவரை இருவரும் வரவேற்றனர். காஞ்சீபுரம் சென்று இந்து கோவில்கள், பட்டு சேலை கடைகளுக்கு சென்றார். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். கமல்ஹாசன் நடித்த 'மருதநாயகம்' படப்பிடிப்பு தொடக்கவிழாவில் கலந்துகொண்டார்.

இங்கிலாந்து நாட்டு ராணியாக இருந்தாலும் தமிழக மக்களின் நினைவில் அவர் எப்போதும் இருப்பார். மன்னர் சார்லசும் இந்தியாவுக்கு இதுவரை 10 முறை வந்திருக்கிறார். இங்கிலாந்து மக்களின் துயரத்தில் பங்குகொள்ளும் இந்தியா, புதிய மன்னர் சார்லசையும், நமது நட்புறவு மென்மேலும் பெருகும் என வாழ்த்துகிறது.


Next Story