“எனக்கு திருப்புமுனை படம் என்.ஜி.கே.” - பட விழாவில் சூர்யா பேச்சு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள என்.ஜி.கே. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Update: 2019-05-01 23:45 GMT
டிரெய்லரில் ‘படிச்சவன் எல்லாம் ஒதுங்கி போறதாலதான் நம்ம நாடே சுடுகாடா போயிருக்கு’, ‘நாம் உண்மையிலேயே சுதந்திரத்தை பிரிட்டீஷ்காரன்கிட்ட இருந்து வாங்கி அரசியல்வாதிகிட்ட கொடுத்துட்டோம்’, ‘அவனுக்கு நாட்டின் மீது பைத்தியம்’ போன்ற அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

விழாவில் சூர்யா பேசியதாவது:-

“ரத்தம் சிந்தாத யுத்தம் அரசியல் என்பார்கள். அந்த வகையில் என்.ஜி.கே. அரசியல் படமாக தயாராகி உள்ளது. படத்தில் புதிய விஷயங்கள் நிறைய உள்ளன. நடிப்பிலும் புதுமை காட்ட வேண்டி இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் 2002-லேயே நடிக்க விரும்பினேன். 17 வருடத்துக்கு பிறகு அந்த கனவு நிறைவேறி இருக்கிறது.

அவரது கதை, திரைக்கதை மீது எப்போதும் எனக்கு அளவு கடந்த காதல் உண்டு. மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். எனது மகன் இப்போதும் மைக்கேல் ஜாக்சன் பாடல்களுக்கு ஆடுகிறான். அதே மாதிரி யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் அடுத்த தலைமுறைக்கும் செல்லும் வகையில் காலத்தை கடந்தும் நிற்க கூடியவை.

சாய்பல்லவிக்கு சவாலான கதாபாத்திரம் அதை சிறப்பாக செய்து இருக்கிறார். அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்தார். ஒவ்வொரு காட்சியிலும் நடித்துவிட்டு இன்னும் நன்றாக நடித்து இருக்கலாமே என்று அழுவார். நன்றாகத்தான் நடித்து இருக்கிறீர்கள் என்று சொன்னாலும் திருப்தியாக மாட்டார். என்.ஜி.கே. படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படம்”.

இவ்வாறு சூர்யா பேசினார்.

விழாவில் சாய்பல்லவி பேசும்போது, “நான் சூர்யாவின் ரசிகை. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். நடிகர் சிவகுமார், யுவன் சங்கர்ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்