இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

Update: 2022-04-04 05:30 GMT
1. எனக்கு பதற்ற நோய் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், சரியான வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறேன். மேற்படிப்பு படிக்க முயன்றாலும் அதில் கவனம் செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் மிகுந்த மனஅழுத்தத்துக்கு ஆளாகியுள்ளேன். நான் இதில் இருந்து மீள்வதற்கான வழி கூறுங்கள்.
உங்களுக்கு பதற்ற நோய் இருப்பதை மருத்துவ ரீதியாக கண்டறிந்தீர்களா? இதற்காக, மனநல மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு வருகிறீர்களா? உங்கள் பிரச்சினைக்கு, நீங்கள் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதன் மீதும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகும். இந்தக் கவலையால் படிக்கவோ, வேலை செய்யவோ முடியாத நிலை ஏற்படும். எனவே முதலில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று யோசித்து, அதில் முழுமையாக ஈடுபடுங்கள்.



2. எனக்கு 43 வயது ஆகிறது. இதுவரைக்கும் சரியான படிப்போ, வேலையோ இல்லாமல் இருக்கிறேன். எனது பெற்றோர் எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி வருகின்றனர். ஆனால் அவற்றை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு பாரமாக இருப்பதாக உணர்கிறேன். அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் வாழ்வதற்கு எனக்கு வழிகாட்டுங்கள்.
முதலில் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள். உங்கள் வலிகளிலிருந்து உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விடுபடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பம் உங்களை ஒரு பொருளாதாரச் சுமையாகப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்ப்பது அவர்களுக்குப் பெரிய சுமை. எனவே அவர்களின் துன்பத்தைப் போக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தித்து செயல்படுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்