இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

Update: 2022-04-18 05:58 GMT
1. என் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான். எந்த நேரமும் கையில் மொபைல் போனுடன்தான் இருக்கிறான். அதைப்பற்றி கேட்டாலோ அல்லது அறிவுரை கூறினாலோ கோபப்
படுகிறான்.  இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள். 

தற்போதைய காலத்தில் வகுப்புகள், பிற பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றம், செய்திகளை அறிந்துகொள்வது, சமூக தொடர்புகள் என அனைத்தும் மொபைலில் நடப்பதால், அதில் செலவழிக்கும் நேரத்தின் அளவு அதிகரிக்கிறது. இருப்பினும் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறுவது பலனளிக்காது. இந்த வயதில் அறிவுரைகளை ஏற்பதைவிட, அவற்றை சவாலாக நினைப்பதே அதிகமாக இருக்கும். ஏனெனில் பகுத்தறிந்து பார்க்கும் மனநிலையை விட, உணர்ச்சிப் பூர்வமாக பார்க்கும் மனநிலை அதிகமாக வேலை செய்யும்.

அவரது கல்வித் தேவைகளைத் தவிர, இதர வேலைகளுக்காக மொபைலில் அதிகமான நேரத்தை செலவிடுவது, அவருடைய அன்றாட செயல்பாட்டை பாதிக்கும். மது, புகை போல மொபைல் போன் பயன்பாடும் ஒரு விதமான போதையாகவே பார்க்கப்படுகிறது.

அவரை இதில் இருந்து மீட்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொதுவான உரையாடல்களில் அதிக நேரம் செலவிடுங்கள். பிள்ளை
களோடு போதுமான குடும்ப நேரத்தை செலவிடுவது முக்கியமானது. இந்த நேரங்களில் உங்கள் மகனுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள். தனிமையை தவிர்த்து அவரை குடும்பத்தோடு ஒன்ற வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவரது மொபைல் பயன்பாட்டை மிகவும் கவலைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இயல்பாக அவரை அணு குங்கள்.



2. நான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவள். என் உடன் பிறந்த சகோதர-சகோதரிகள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு, அவரவர் குடும்பத்தோடு இருக்கிறார்கள். எனது மூத்த சகோதரியின் திருமண வாழ்க்கை நல்ல முறையில் இல்லாததால், குழந்தையோடு மீண்டும் தாய் வீட்டுக்கே வந்துவிட்டாள். 

இந்த நிலையில் எனக்கு திருமணம் நடந்தது.  கணவரின் நடத்தை சரியில்லாததால், திருமணம் நடந்த சில மாதங்களிலேயே அவரை விட்டுப் பிரிந்தேன். இப்போது நான் மீண்டும் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழையலாமா அல்லது வாழ்க்கையை இப்படியே கடந்துவிடலாமா? எனக்கு நல்வழி காட்டுங்கள்.

நீங்கள் கடந்து வந்த தோல்வியுற்ற திருமண அனுபவத்தைக் கருத்தில் கொண்டும், உங்கள் சகோதரிக்கு நேர்ந்ததைப் பார்க்கும்போதும், திருமணம் என்ற அமைப்புக்குள் நுழைவதற்கு உங்களுக்கு கவலையும், பயமும் ஏற்படுவது இயற்கையானது. அதே சமயம் உங்களது மற்ற உடன்பிறப்புகள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லோரது திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகள் என்பவை வரக்கூடியவையே.

திருமணம் செய்து கொள்வதா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் முன், உங்களின் எதிர்கால உறவில் சிறந்த பங்களிப்பை வழங்க நீங்கள் எந்த விதத்திலாவது மாற வேண்டுமா? என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தால், இன்னொரு நபரை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். மேலும் திருமண வாழ்க்கையில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒருவரை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால், ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? சிந்தித்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள். 

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

மேலும் செய்திகள்