அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’

உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்

Update: 2021-11-15 05:30 GMT
“உணவை அழகான ஓவியமாக மாற்றிக் கொடுத்தால் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அழகாகச் சாப்பிட வைக்கலாம்’’ என்கிறார் சென்னையில் வசிக்கும் ரேவதி சம்பத். இவர் ரியா, தியா எனும் இரட்டைக் குழந்தைகளின் தாய். சமூக வலைத்தளங்களில் தனது ‘லஞ்ச் ஆர்ட்’ மூலம் கலக்கி வரும் ரேவதியுடன் ஒரு சந்திப்பு.

“எனக்கு ‘கியூட் லஞ்ச்’ தயார் செய்வதில் ஆர்வம் உண்டு. இதன் மூலம் என் குழந்தைகளை ஆரோக்கியமான, சத்துள்ள உணவை எளிதாகச் சாப்பிட வைக்கிறேன். அவர்கள் உணவை மிச்சம் வைக்காமல், சிரமப்படாமல் சாப்பிடுகிறார்கள். எனது ஐடியாக்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுகிறேன்.

நான் உருவாக்கும் அனைத்து உணவு ஓவியங்களையும் கைகள் மூலமே வடிவமைக்கிறேன். சில உருவங்களை வடிவமைப்பதற்கு மட்டும் கருவிகள் பயன்படுத்துகிறேன். இதற்கு உபயோகிக்கும் நிறங்களையும் காய்கறிகளைக் கொண்டு வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கலாம்.



உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்”.

உணவு ஓவியம் மூலம் குழந்தைகளுக்கு உணவின் மேல் விருப்பம் அதிகரித்துள்ளதா?  

நான் லஞ்ச் ஆர்ட் செய்ய ஆரம்பித்த பின்பு என் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறியுள்ளது. புதுப் புது உணவைச் சாப்பிடும் ஆர்வமும், உற்சாகமும் அதிகரித்துள்ளன. உணவு ஓவியங்களைப் பார்ப்
பதற்கு ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். உணவையும் முழுமையாகச் சாப்பிடுகிறார்கள்.

நான் அவர்களுக்கு அனைத்து சத்துக்களும் இருக்கும் சரிவிகித உணவைக் கொடுக்கிறேன். அதனால் அவர்களுக்கு அதுவே போதுமான அளவாக இருக்கிறது.

நீங்கள் தயாரித்த உணவு ஓவியங்களில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தது எது?
என் குழந்தைகளுக்கு நான் தயார் செய்யும் அனைத்து படைப்புகளும் பிடிக்கும். குறிப்பாக காளான் மீது உட்கார்ந்தபடி எலி பூக்களை முகர்ந்து பார்க்கும் ஓவியம் மிகவும் பிடிக்கும். அதில் தக்காளி சாதம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சீஸ் போன்றவற்றை பயன்படுத்தினேன். வீட்டில் துணி காய்ந்து கொண்டிருக்கும் காட்சியின் ஓவியமும் அவர்களுக்குப் பிடிக்கும். அதை ரொட்டித்துண்டு, சீஸ் மற்றும் காய்கறிகளை வைத்து தயார் செய்தேன்.

தாய்மார்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

உணவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய முயற்சி செய்யுங்கள். எளிதான டிசைன்களை செய்ய முயற்சி செய்து குழந்தைகளுக்கு ஆர்வத்தை உண்டாக்குங்கள். குழந்தைகள் உணவை ரசித்து முழுமையாகச் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம்.

சிறிய முயற்சி செய்தால் டி.வி, செல்போன் இல்லாமல்,  உணவை மட்டும் பார்த்து சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தலாம்.

மேலும் செய்திகள்

போபா டீ