பெண்களின் எடைக் குறைப்பில் தூக்கத்தின் பங்கு

ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு தூக்கம் முக்கியமான ஒன்றாகும். அது சரியான வழியில் கிடைக்காவிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து எடை கூடுவதற்கும், குறைவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளது.;

Update:2022-02-28 11:00 IST
பெண்கள் பலர் உடல் எடையை குறைப்பதற்காக உணவு முறையில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறார்கள்.

உடல் எடைக்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு. அதிக தூக்கம், தூக்கமின்மை மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் அதிக அளவு எலக்ட்ரானிக் பொருட்களில் வேலை செய்வதும், கணினி மற்றும் மொபைல் போனை அதிகமாக பார்ப்பதும்,  தரமான உறக்கத்திற்கு வழி செய்யாத காரணத்தால் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

இரவில் சராசரியாக 6 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது எடையில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தாது. அதே சமயம் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே பெண்கள்  அதிகாலையில் எழுதுவது மிகவும் சிறப்பானது. இதன் மூலம் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

அது போல ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு தூக்கம் முக்கியமான ஒன்றாகும். அது சரியான வழியில் கிடைக்காவிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து எடை கூடுவதற்கும், குறைவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

சராசரியாக 7, –8 மணி நேரம் தூங்கினால் அதிக எடை மற்றும் உடல் பருமனைத் தடுக்கலாம் என சீன ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் மதிய நேரம் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

புரதம் நிறைந்த உணவுகளில் இருக்கும் ‘செரோடோனின்’ மூளைக்கு தூக்கத்தை உருவாக்கும் சமிக்ஞைகளைத் தூண்டும். எனவே மதிய உணவில் சோயா, முட்டை,  மீன்,  வாழைப்பழம் போன்றவற்றை குறைவாக சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

இரவு நேரத்தில் கண் விழித்து வேலை செய்யும்போது அதிக அளவு எண்ணெய் பண்டங்களை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும்,  சரியான நேரத்தில்  சரியான அளவு தூங்குவது முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட்டால், உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

வேலைகளை விரைவாக முடித்து விட்டு  இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்வது நல்லது. அதுபோல அதிகாலையில் எழுந்து அன்றாட வேலைகளை தொடங்குவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

மேலும் செய்திகள்