தாய்மை அளித்த தொழில்

பசும்பால், ஆட்டுப்பால், ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், கற்றாழை, முருங்கைக் கீரை, ஆரஞ்சு, லெமன், வெட்டிவேர், ரெட் ஒயின் என பலவகையான சோப்புகளைத் தயாரித்து வருகிறேன்.

Update: 2021-12-20 05:30 GMT
சாயனப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவதால், தனது குழந்தையின் மென்மையான சருமம் பாதிக்கப்படும் என கவலைப்பட்டார் சென்னையைச் சேர்ந்த லில்லி. 

அதற்கான தீர்வு பற்றி யோசித்தபோது, அவருக்கு தோன்றியதுதான் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மென்மையான சோப். அந்த யோசனையை தொழிலாக மேற்கொண்டு, அதையே தனது அடையாளமாக மாற்றிக்கொண்டார். அவர் தொழில் முனைவோர் ஆனதன் பின்னணி இங்கே…

ஒரு நாள், அவரது குழந்தைக்குக் கடையில் வாங்கிய கஸ்தூரி மஞ்சளை தேய்த்துக் குளிக்க வைத்துள்ளார். குளித்து முடித்தவுடன் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. அழுகையின் காரணம் தெரியாமல் தவித்த லில்லி, கடையில் வாங்கிய மஞ்சள் ஏற்படுத்திய எரிச்சலால் குழந்தை அழுவதைத் தெரிந்து கொண்டார். குழந்தைக்காக, மாமியாரிடம் கேட்டு குளிப்பதற்கு பயன்படுத்தும் நலங்கு மாவினை தயாரித்தார். 

அதன் தொடர்ச்சியாக ‘காஸ்மெட்டிக் பார்முலேஷனில்' டிப்ளமோ படித்து, நலங்கு மாவு சோப்பு தயாரித்து குழந்தைக்குப் பயன்படுத்தி வந்தார். தான் தயாரித்த நலங்கு மாவு சோப்பை உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் கொடுத்தார். அவர்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் ஊக்கத்தால் குழந்தையின் பெயரில் ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்களைத் தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளார்.

‘‘என் குழந்தைதான் என்னைத் தொழில் முனைவோராக்கியவள். அவளுக்காக சோப் தயாரிக்கத் தொடங்கினேன். பிறகுதான், பல தாய்மார்களும், அவர்களது குழந்தைக்காக ரசாயனமற்ற சோப்பினைத் தேடி அலைகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம் என்பதால், அவர்களது தேடலுக்கான விடையினை, நான் அளித்திட எண்ணினேன். 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே பலரும் தொடர்பு கொண்டு சோப் ஆர்டர் செய்தனர். அவரவர் தேவைக்கு ஏற்ற சோப்பினைத் தயாரித்துக் கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் எளிதில் அங்கீகரித்துவிட்டனர்.

பசும்பால், ஆட்டுப்பால், ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், கற்றாழை, முருங்கைக் கீரை, ஆரஞ்சு, லெமன், வெட்டிவேர், ரெட் ஒயின் என பலவகையான சோப்புகளைத் தயாரித்து வருகிறேன். நிறைவான வருமானமும் கிடைக்கிறது. இவற்றைவிட, பல வாரங்கள் காத்திருந்து சோப்பினை வாங்கி குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் தாய்மார்கள் எனது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதே எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்கான கூடத்தினை உருவாக்கி, மாற்றுத் திறனாளிகளைப் பணிக்கு அமர்த்த வேண்டும்’’ என்று தனது எதிர்காலக் கனவுகளைக்கூறி முடித்தார் லில்லி. 

மேலும் செய்திகள்