“நம்மால் முடியாது என்று எதுவும் கிடையாது” - வேளாங்கண்ணி
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அதன் நன்மையும், தீமையும் நன்றாகவே தெரியும். என்னால் முடிந்த எதையாவது செய்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அந்த பிடிவாதமே எனக்கான ஆர்வத்தை தந்தது.;
சென்னை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு வசிக்கிறார். காசிமேடு மீன்பிடி பகுதியில் மீன் கழிவுகளை உரமாகவும், மீன், இறால் வளர்ப்பிற்கு தேவையான உணவாகவும் மாற்றும் மறுசுழற்சி முறையை செய்து வருகிறார். மீன் மற்றும் இறால்களுக்கான உணவை தயாரிக்கும் தொழிற்சாலையை சொந்தமாக நடத்தி வருகிறார். இரண்டு வருடங்களில் தனது கடின உழைப்பால் இந்தத் துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
‘‘மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்து, அன்றாட வாழ்வையும், என் குடும்பத்தையும் நடத்தி வந்தேன். இருப்பினும் வாழ்வில் ஏதேனும் ஒன்றை செய்தாக வேண்டும்; அது என்னை மட்டுமில்லாமல், என் சமூகத்தையும் உயர்த்தும் விதமாக இருக்க வேண்டும் என எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டிருப்பேன். அதன் வெளிப்பாடுதான் எனது தொழிற்சாலை.
உங்கள் நிறுவனத்தின் ஆரம்பம் எது?
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழக அதிகாரிகள், ‘பிளான்க்டான் பிளஸ் திட்டம்’ குறித்து எங்களிடம் எடுத்துக்கூறினார்கள். முட்டுக்காடு என்ற இடத்தில் அதன் அனைத்து செயல்பாடுகளையும் விளக்கி பயிற்சி அளித்தார்கள். பயிற்சி காலம் முடியும்பொழுது 15 பேர் கொண்ட குழுவாய் நாங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தோம். அதனை நல்லபடியாக செய்து வந்தோம். அதுவே எங்களின் தொடக்கப்புள்ளி.
‘பிளான்க்டான் பிளஸ்’ என்ற திட்டம் தொழிற்சாலையாக மாறிய தருணம் எது?
பயிற்சி முடித்து வந்தபோது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான இடம் எங்களிடம் இல்லை. சொந்த இடத்தில்தான் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதால் செய்வதறியாமல் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த எங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேறி, அங்கு மீன் கழிவுகளை எடுத்து வந்து அரைத்து, பதப்படுத்தினோம். அதன் சாறினை உணவாகவும், மிஞ்சும் சக்கையினை உரமாகவும் பிரித்து எடுக்க ஆரம்பித்தோம். இது அந்தப் பகுதியில் வசித்தவர்களுக்கு இடையூறாக இருந்ததால், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழக அதிகாரிகள் ஆறு மாத காலத்திற்கு அவர்கள் வளாகத்திற்குள்ளேயே தனி இடம் ஒதுக்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தனர். ஆறு மாதம் கழித்து, எங்கள் உழைப்பை பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கிடைத்தது. அதைக்கொண்டு இயந்திரம் வாங்கி காசி மேட்டில் தனியாக தொழிலைத் தொடங்கினோம்.
நீங்கள் இந்தத் திட்டத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அதன் நன்மையும், தீமையும் நன்றாகவே தெரியும். என்னால் முடிந்த எதையாவது செய்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அந்த பிடிவாதமே எனக்கான ஆர்வத்தை தந்தது. ஆரம்பத்தில் மீன் கழிவுகளைக் கேட்டு காசிமேட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது அதிகபட்சமாக 40 டன் கழிவுகளை அகற்றி அவற்றை உரமாகவும், மீன்களுக்கு உணவாகவும் மாற்றி இருக்கிறோம். எங்கள் மீதான மக்களின் பார்வை மாறியிருக்கிறது. தாமாகவே முன்வந்து கழிவுகளை தருகின்றனர். நான் நினைத்தது போல் என்னால் முடிந்த அளவு என் பகுதியை சுத்தம் செய்து, 8 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறேன். என் குடும்பத்தையும் கவனித்து வருகிறேன்.
தொழில் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது?
ஆரம்ப கட்டத்தில் மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் மீன், இறால் உணவுகள் மற்றும் விவசாயத்திற்கு உதவும் மண் வளத்தை மேம்படுத்தும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களில் விற்பனை செய்ேதாம். இப்பொழுது ஆந்திரா, கர்நாடகா, கேரளா என இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங் களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். எங்கள் ஈடுபாட்டை கண்டு 2021-ம் ஆண்டுக்கான ‘நேஷனல் பிஷர் மேன் விருது’ வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கிடைத்தது.
நான் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு பின்னால் உள்ள ஒவ்வொரு செயல்பாடுகளிலும் உறுதுணையாய் நின்றது என் கணவர் கென்னித்ராஜ் தான். தொழில் நிமித்தமாக தகுந்த நேரத்தில் எங்கள் கரம் பிடித்து தூக்கியது மகாலட்சுமி மற்றும் கே.கே விஜயன். எங்கள் குழுவில் இருந்த அனைவரும் உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
எந்த வேலையுமே இழிவானது கிடையாது. எனவே வாழ்வில் எந்தவொரு வேலையையும் உதாசீனப் படுத்துதல் கூடாது. வாழ்க்கையில் நம்மால் முடியாது என்று எதுவும் கிடையாது. முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அவ்வளவுதான்’’ என்று புன்னகையுடன் கூறினார் வேளாங்கண்ணி.