தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும் - சுதா
என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்றது தையல் சம்பந்தமான தொழில்தான் என எனக்குத் தோன்றியது. ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.;
தையல் கலையை முறையாகக் கற்று, அரசு சான்றிதழ் பெற்று வெற்றிகரமான சுயதொழிலாக செய்து வருகிறார் துறையூரைச் சேர்ந்த சுதா செந்தில்குமார். தன்னைப்போல வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பெண்களுக்கு, தான் கற்றுக்கொண்டதை ஆர்வத்தோடு கற்றுத்தருகிறார். அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
“எனக்கு சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள அயன்புதூர் எனும் சிற்றூர். பெற்றோர் நெசவுத்தொழில் செய்தனர். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.
நான் பிறந்தது முதல் நெசவுத் தறியின் சத்தத்திலேயே வளர்ந்தவள். நெசவாளரின் குடும்பத்தில் அனைவருமே வேலை பார்த்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், தறி சம்பந்தமான வேலைகள் காத்திருக்கும். அதையெல்லாம் கவனித்துக் கொண்டேதான் படித்தேன்.
திருமணத்திற்குப் பிறகு, கணவரின் சொந்த ஊரான துறையூரில் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. கணவர் செந்தில்குமார் அமிர்தலிங்கம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்”.
தொழில்முனைவோராக உருவானது எப்படி?
என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்றது தையல் சம்பந்தமான தொழில்தான் என எனக்குத் தோன்றியது. எனவே பள்ளிப்படிப்பை முடித்ததும் தையல் ஆசிரியை பணிக்கு (T.T.C.) படித்து முடித்தேன். எனக்கு பெண்களுக்குத் தேவையான ஆடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம். எனவே தற்போது கை எம்பிராய்டரி, ஆரி ஒர்க், சேலைகளில் பெயிண்டிங் செய்வது, கூடைகள் பின்னுவது, வீட்டு அலங்காரப் பொருள்கள் தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறேன். ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
சந்தித்த சவால்கள் பற்றி?
இது போட்டிகள் நிறைந்த உலகம். வாடிக்கையாளர்கள் நம்மை நாடி வர சிறப்பாகவும், தனித்தன்மையுடனும் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் மனம் நோகாமலும், குறித்த நேரத்திலும் வேலையை முடித்துத்தர நிறையவே சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. குழந்தைகளையும், வீட்டையும் கவனித்துக்கொண்டு வேலையையும் முழுமனதோடு செய்துவருகிறேன்.
சுய தொழிலில் கிடைக்கிற மன நிறைவு பற்றி?
நான் ஆர்வத்தோடு கற்றுக்கொண்ட கூடை பின்னும் தொழிலில், வெளிநாட்டில் வசிக்கும் தோழியிடம் இருந்து பத்து கூடைகள் ஆர்டர் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.
அதுமட்டுமல்லாது தனியார் அமைப்பு இலவசமாக நடத்திய தையல் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தேன். பணி நாட்கள் முடிந்து பள்ளிவிட்டு வரும்போது அங்கு படித்த மாணவிகள் தங்களது அன்பை தெரிவித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். அன்பில் நனைந்த நிமிடங்கள் அவை.
என்னிடம் கற்றுக்கொண்ட மாணவிகள், இல்லத்தரசிகள் சுயமாகத் தொழில் செய்து முன்னேறி வருகிறார்கள் என்பதை அறியும்போது மனநிறைவு கிடைக்கிறது.