நாட்டியம் மூலம் திருக்குறள் விளக்கம்

மெலட்டூர் பாணி நடனம் மற்றும் நான் கற்றுத் தேர்ந்த ‘சுத்த நிர்த்தம்', ‘பட்டஜ நாட்டியம்' உள்ளிட்ட கலைகள் அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்வதற்கு வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டும்.

Update: 2022-04-04 05:30 GMT
ரதக் கலை பயின்று சாதனைப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதோடு, தனது மாணவிகளும் பரதத்தில் கின்னஸ் உட்பட பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் கலைவாணி மனோஜ் ராஜ்குமார்.

அவரிடம் பேசினோம்...

“பரதக்கலையில் ‘மெலட்டூர் பாணி' என்பது புகழ்பெற்றது. அதில் சிறந்து விளங்கியவர் மாங்குடி துரைராஜ். அவரது பிரதான சீடர்களான எம். சுந்தரம் மற்றும் ஏ.பி. ஹரிதாஸ் இருவரிடமும் முறைப்படி நடனம் கற்றவர் என்னுடைய தந்தை எஸ்.ஆர். ரவிச்சந்திரன். அவரிடம் நடனம் கற்றுத் தேர்ந்தவள் நான். 

அடுத்ததாக, ஏ.பி. ஹரிதாஸிடம் ‘சுத்த நிர்த்தம்', ‘பட்டஜ நாட்டியம்' என்கிற இரண்டு வெவ்வேறு நடனக் கலைகளையும் கற்று அரங்கேற்றம் கண்டேன்.

எம்.பி.ஏ., படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றேன். திருச்சி கலைக்காவேரி கல்லூரியில் பரதநாட்டியப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன்.

30 வருடங்களுக்கும் மேலாக எனது தந்தை நடத்தி வரும் நடனப் பள்ளியின் இயக்குநராக பொறுப்பேற்று நிர்வகித்து வருகிறேன்.

தமிழ்ப் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடுவதைக் கொள்கையாக வைத்து நடனப்பள்ளி நடத்தி வருகிறோம். வேற்றுமொழிப் பாடலாக இருந்தாலும், இயல்பாக பாடல் எழுதும் திறமை பெற்ற எனது தந்தை, பொருள் மாறாமல் தமிழில் அதனை மொழியாக்கம் செய்து மேடையேற்றி வருகிறார்.

தமிழ்ப் பாடல்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்?
எல்லைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சி. எனது அம்மாவுக்கு உறவு முறை. அவர் வழிவந்த குடும்பம் என்பதால், எங்கள் குடும்பத்தினருக்கு தமிழ்ப் பற்று அதிகம். அதன் காரணமாகவே தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

நீங்கள் கலந்துகொண்டவற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் பற்றி சொல்லுங்கள்?
சிறு வயதில் பள்ளி ஆண்டு விழாவில் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்வில் அவரது முன்னிலையில் நடனம் ஆடினேன்.

ஒருமுறை மியூசிக் அகாடமி அரங்கில் இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா முன்னிலையில் நடனமாடினேன். அதைப் பாராட்டி, பிரபல இசை நாட்டிய விமர்சகர் சுப்புடு எனக்கு  ‘இளம் நாட்டிய கலைமணி' என்ற விருது கொடுத்தார். டி. கே. எஸ். கலைவாணன் இசையமைத்த 100 திருக்குறள்களுக்கு நாட்டியம் ஆடினேன்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியிலும் ஆடியிருக்கிறேன். எங்கள் நடனப்பள்ளியில் நடனமும் பாட்டும் கற்றுக்கொள்கிற  மாணவிகளை ஒருங்கிணைத்து கின்னஸ் சாதனை உட்பட ஐந்து நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன்.

ஐயப்ப ஜனனம், கண்ணகியின் சிலம்போசை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஞான முருகன் உள்ளிட்ட நாட்டிய நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறோம். ஞான முருகன் நாட்டிய நாடகத்தில் முருகனாகவும், பார்வதியாகவும் ஆடியபோது அதிக அளவு பாராட்டுகள் கிடைத்தன.



பாடகியாகவும் மேடைகளில் உங்களைப் பார்க்க முடிகிறதே?
குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் நடனப்பள்ளியில் பரதநாட்டியத்தைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு வளர்ந்ததால் சிறுவயதிலேயே பாடுவதில் ஆர்வம் வந்தது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஏ.பி.ஹரிதாஸிடம்  முறைப்படி வாய்ப்பாட்டும், கொன்னக்கோல் மற்றும் நட்டுவாங்கமும் கற்றுக் கொண்டேன். கச்சேரிகளில் அவருடன் சேர்ந்து பாடவும் தொடங்கினேன். இப்போதும் பரதநாட்டிய சலங்கை பூஜைகளில், அரங்கேற்ற விழாக்களில் பாடி வருகிறேன். குருவாக இருந்து மாணவிகளுக்கு பரத நாட்டியத்துடன், வாய்ப்பாட்டும் கற்றுக் கொடுக்கிறேன்.

குடும்பத்தினர் பற்றி?
தந்தை குருவாக இருந்து வழிநடத்த, தாயார் விஜயா எனது வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டி வருகிறார். கணவர் மனோஜ் ராஜ்குமாரின் ஆதரவும், ஊக்குவிப்பும் எனது கலைப்பயணத்துக்குப் பக்கத் துணையாக இருக்கிறது.

எங்களின் பிள்ளைகள் ஹர்ஷன் பிரணவ் மற்றும் விஷ்வக் சரண். இருவரும் இந்தத் துறையில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

உங்கள் லட்சியம் என்ன?
மெலட்டூர் பாணி நடனம் மற்றும் நான் கற்றுத் தேர்ந்த ‘சுத்த நிர்த்தம்', ‘பட்டஜ நாட்டியம்' உள்ளிட்ட கலைகள் அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்வதற்கு வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டும். 

‘பட்டஜ நாட்டியம்', ‘சுத்த நிர்த்தம்'
சங்க காலத்தில் குறிப்பிட்ட 11 வகை நாட்டியங்களில் பட்டஜ நாட்டியம், சுத்த நிர்த்தம் உள்ளிட்டவை அடக்கம். ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் கேடயமும் வைத்துக் கொண்டு ஆடுவதற்குப் ‘பட்டஜ நாட்டியம்' என்று பெயர். மதுரை மீனாட்சியம்மன் ‘பட்டஜ நாட்டியம்' ஆடியதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

எவ்வித பாடல்களுமின்றி பரத நாட்டிய குரு அமைத்த நாட்டிய ஜதிகளுக்கு, மிருதங்கக் கலைஞர் வாசிப்புக்கு ஏற்ப ஆடிக்காட்டி சலங்கை நாதத்தை வெளிப்படுத்துவதற்குப் பெயர் ‘சுத்த நிர்த்தம்'.

நாட்டிய குரு மாங்குடி துரைராஜ் 1960-ம் ஆண்டு ஓலைச்சுவடிகளிலும், இலக்கியங்களிலும் இருந்து ‘பட்டஜ நாட்டியம்', ‘சுத்த நிர்த்தம்' என்ற இரண்டு வகை நாட்டியம் பற்றி தெரிந்துகொண்டு அதனை அரங்கேற்றினார். அதனைத் தொடர்ந்து சிலர் அந்த நடனங்களை ஆடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்