பிரபல கூடைப்பந்து வீரர் பிரையன்ட் பலியாவதற்கு முன் எடுத்த கடைசி புகைப்படம் வெளியீடு

பிரபல கூடைப்பந்து வீரர் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் வெளியாகி உள்ளது.

Update: 2020-01-30 13:45 GMT
கலிபோர்னியா,

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் (வயது 41). கூடைப்பந்து வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டுடன் விளையாட்டுக்கு முழுக்குபோட்ட அவர், மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் கூடைப்பந்து பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். இதில் அவருடைய 13 வயது மகளான கியானாவும் பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் அருகேயுள்ள தவுசன்ட் ஆக்ஸ் என்ற இடத்தில் கோபே பிரையன்டின் அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அவருடைய மகள் கியானாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால் தனியார் ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கோபே பிரையன்ட், அவரது மகள் கியானா மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட 9 பேர் கடந்த 26ந்தேதி இரவு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

கலாபசாஸ் என்ற இடத்தின் அருகே கடும் பனிமூட்டத்தின் நடுவே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. மேலும் அந்த இடம் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாகும். இதில், அடர்ந்த மரங்களுக்கு நடுவே ஹெலிகாப்டர் சிக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.  இதில் பிரையன்ட் உள்பட 9 பேரும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள பிரையன்டின் விளையாட்டு அகாடமியில், பிராடி ஸ்மிகீல் (வயது 13) என்ற சிறுவன் விளையாடி வந்துள்ளார்.

பிரையன்டிடம் சென்று பிராடி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.  கியானாவின் அணி தோற்று போயிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்காமல் பிரையன்ட் சென்று விட்டார்.  ஆனால், பிரையன்டின் தீவிர ரசிகையான பிராடி, அவர் நடந்து செல்லும்பொழுது செல்பி ஒன்றை எடுத்து விட்டார்.

இதன்பின் விடாமல், கியன்னாவின் 2வது போட்டி முடியும் வரை அன்று முழுவதும் பிராடி காத்திருந்து உள்ளார்.  பிரையண்ட் மற்றும் அவரது மகள் கியானா இருவரும் வெளியே வரும்வரை காத்திருந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என பிரையன்டிடம் 2வது முறையாக கேட்டு உள்ளார்.

அதற்கு பிரையன்ட், நாளை புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என கூறிவிட்டு சென்றார்.  ஆனால் அது நிறைவேறாமலேயே போய் விட்டது.  ஏனெனில், அடுத்த நாள் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிரையன்ட் மற்றும் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் உயிரிழந்து விட்டனர்.

பிராடி, பிரையன்டுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தினை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.  அதனுடன், இது நேற்று எடுத்தது.  நாளை நல்ல படம் ஒன்றை எடுத்து கொள்ளலாம் என பிரையன்ட் கூறினார்.  அடுத்த நாள் விபத்தில் அவர் பலியான செய்தியை அறிந்தேன்.  என்னால் அதனை நம்பவே முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்