அனல் மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி - சென்னையை சேர்ந்த தந்தை-மகன் மீது வழக்கு

அனல் மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update:2019-08-01 03:45 IST
தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி சோழியசெட்டி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 71). இவர் சென்னை மண்ணடியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஞானவேல். இவர் என்ஜினீயர். பரமசிவத்துக்கு, சென்னை மண்ணடி வெங்கடமேஸ்திரி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, முருகேசன், அவருடைய மகன் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும், பரமசிவம் மகன் ஞானவேலுக்கு சென்னை அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பரமசிவத்திடம் ரூ.2 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்கள் வேலை வாங்கிக் கொடுக் காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பரமசிவம் மனு தாக்கல் செய்தார்.அதன்பேரில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு தேனி மாவட்ட குற்றப்பிரிவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக முருகேசன், சண்முகசுந்தரம் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்