தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.;

Update:2019-08-01 04:15 IST
ஆண்டிப்பட்டி,

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்க கம்பம் பள்ளத்தாக்கு கிளை, முல்லைப்பெரியாறு கிளை, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழக அனைத்து அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரவாளி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவக்கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் மாவட்ட செயலாளர் சிவா, அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை கைவிட வேண்டும். டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

டாக்டர்கள் உரிமம் பெற வேண்டும் என்ற திட்டத்தை கைவிடவேண்டும். நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அலோபதி டாக்டர்கள் தவிர ஹோமியோபதி, சித்தா டாக்டர்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கள், பயிற்சி டாக்டர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் என 300-க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் நேற்று காலை 6 மணியளவில் மூடப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 300 தனியார் மருத்துவமனைகள் நேற்று மூடப்பட்டன.

மருத்துவமனையின் முன்பு வேலை நிறுத்தம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 800 டாக்டர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டம் 24 மணி நேர போராட்டம் ஆகும். எனவே, இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு இருக்கும். தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 

மேலும் செய்திகள்