பெரியகுளத்தில், வங்கிக் கணக்கில் மாயமான ரூ.2 லட்சத்தை மீட்டுக் கொடுத்த போலீசார் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

பெரியகுளத்தில் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.;

Update:2019-08-01 03:45 IST
தேனி,

பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார். இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். சேமிப்பு கணக்கில் இருந்து கிரெடிட் கார்டு (கடன் அட்டை) கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் இருந்து அவருக்கு கிரெடிட் கார்டு வருவதற்கு முன்பே அவருடைய கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்தது. அந்த வகையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி கிளைக்கு சென்று புகார் தெரிவித்தார். ஆனால், அங்கு அவருக்கு பணம் திரும்பக் கிடைக்காததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் இதுகுறித்து புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த விவரங்கள் கேட்டு வங்கி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயகுமார் வங்கிக் கணக்கு எண் வேறு ஒரு நபரின் கிரெடிட் கார்டு எண்ணுடன் தவறுதலாக இணைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. அந்த நபர் தனது கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கிய நிலையில், அது விஜயகுமாரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை காலி செய்துள்ளது.

இதையடுத்து அவர் இழந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை, வங்கி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மீண்டும் அவருடைய வங்கிக் கணக்கிற்கே மீட்டுக் கொடுத்தனர். பணத்தை மீட்டுக் கொடுக்க சிறப்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமானால், உடனே சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவிக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் தொடர்பு கொண்டு மோசடி செய்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் ஏதேனும் பொருட்களை வாங்க செலவிடுகின்றனர். எனவே, வங்கிக் கணக்கில் இருந்து திடீரென பணம் மாயமானால், 24 மணி நேரத்துக்குள் சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்தால் அவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தாமதமின்றி புகார் கொடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்