பா.ஜனதா போட்டியில் இருந்து விலகியது மராட்டிய சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த நானா பட்டோலே தேர்வு

மராட்டிய சட்டசபையின் புதிய சபாநாயகர் தேர்தலில் பாரதீய ஜனதா போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து சபாநாயகராக காங்கிரசின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2019-12-01 23:15 GMT
மும்பை, 

மராட்டியத்தில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ‘மகா விகாஷ் முன்னணி' ஆட்சி அமைத்து உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அவரது அரசு வெற்றி பெற்றது.

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கு பாரதீய ஜனதாவின் காளிதாஸ் கோலம்கரும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சே பாட்டீலும் தற்காலிக சபாநாயகர்களாக இருந்து சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.

இந்தநிலையில், மராட்டிய சட்டசபைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக சகோலி தொகுதி எம்.எல்.ஏ. நானா பட்டோலே அறிவிக்கப்பட்டார். பாரதீய ஜனதா சார்பில் முர்பாட் எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரே களம் இறக்கப்பட்டார். 2 வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று காலை சட்டசபை கூடியது. அப்போது, பாரதீய ஜனதா வேட்பாளர் கிஷான் கத்தோரே திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதனால் மகா விகாஷ் முன்னணியின் வேட்பாளரான காங்கிரசின் 56 வயது நானா பட்டோலே, மராட்டிய சட்டசபையின் புதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் முறைப்படி அமர வைத்தனர்.

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில், ஒரு விவசாயியின் மகன் சபாநாயகர் பதவியை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் அவரை பாராட்டி பேசினார்.

மராட்டிய சட்டசபையின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நானா பட்டோலே விதர்பா மண்டலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தின் சகோலி தாலுகாவில் பிறந்தவர். 1987-ம் ஆண்டில் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பிரதிநிதியாக தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். வணிகவியலில் பட்டம் பெற்ற நானா பட்டோலே காங்கிரசில் சேர்ந்து 1991-ம் ஆண்டு பண்டாரா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆனார்.

1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறிய நானா பட்டோலே, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், பாரதீய ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 4-வது முறையாக சகோலி தொகுதியில் போட்டியிட்ட அவர், தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமாக இருந்த அப்போதைய மந்திரி பாரினே புக்கேவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்