இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.;
தெஹ்ரான்,
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் மோதல் மூண்டது. 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது. தற்போது வரை 10க்கும் மேற்பட்டோருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இளைஞருக்கு ஈரான் நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரானின் ஊர்மியா நகரை சேர்ந்த 27 வயதான கேஷ்வர்ஷ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களுக்குமுன் ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேஷ்வர்ஷ் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். கேஷ்வர்ஷ் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மொசாட்டிற்கு உளவு பார்த்தது உறுதியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கேஷ்வர்சுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.