அருணாசல பிரதேசத்தில் உயிரிழந்த, மதுரை ராணுவ வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி - சொந்த ஊரில் உருக்கம்

அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த போது விபத்தில் சிக்கி பலியான ராணுவ வீரரின் உடலுக்கு சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-12-12 22:00 GMT
திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் அருகே உள்ள சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 26). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ராணுவ பணியில் சேர்ந்தார். கடந்த 9 வருடங்களாக ராணுவத்தில் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாசலபிரதேச மாநிலத்தில் மலைப்பகுதியில் ராணுவ வண்டி மூலம் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு முகாமினை மாற்றினர். அப்போது ராணுவ வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பாலமுருகன் இறந்தார்.

பாலமுருகனின் உடல் நேற்று விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டது. அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சோளம்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

முறைப்படி அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாலமுருகன் உடலை கலெக்டர் வினய் பெற்றுக்கொண்டார். அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பாலமுருகன் குடும்ப முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இதில் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கள்ளிக்குடி தாசில்தார் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலமுருகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அந்த கிராமமே அங்கு திரண்டு இருந்தது. கிராமத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்