தஞ்சை கீழவாசல் பகுதியில் கடைகளின் முன்பு குளம்போல் தேங்கி நிற்கும் பாதாளசாக்கடை கழிவுநீர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் கடைகளின் முன்பு குளம்போல் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2020-01-05 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, பள்ளிஅக்ரகாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரில் அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் இந்த உந்துநிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

இதற்காக ராட்சத குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை கீழவாசல் பகுதியிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

கழிவுநீர் வெளியேற்றம்

தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடை, பாத்திரக்கடை, நாட்டுமருந்துகடைகள் முன்பு இந்த கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. கடந்த 15 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேறி கடைகளின் முன்பு குளம்போல் தேங்கி காணப்படுகிறது.

அவ்வாறு தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் வியாபாரிகள் மட்டும் அல்லாது, இந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடை குழாயில் இருந்து ஒரு குழாய் மழைநீர் வடிகாலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மழைநீர் பாதாள சாக்கடை குழிக்குள் செல்லும் வகையில் இந்த குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு காரணமாக மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் மூலம் பாதாள சாக்கடை நீர் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது.

இதனால் வியாபாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அடைப்பை சரிசெய்து தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

மேலும் செய்திகள்