அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...?
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.;
சென்னை,
புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மதியம் ராணுவ விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் திருச்சியில் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர், மாலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் நேற்று இரவு மீண்டும் திருச்சி வந்து, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதனையடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலர் நேற்று இரவு தனியார் ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பலமணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களுடன் மத்திய மந்திரி பியூஸ்கோயல், பா.ஜனதா மாநில தலைவர் நயினார்நாகேந்திரன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், திருச்சியில் தங்கியுள்ள மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே தொகுதி பங்கீடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் இணைய உள்ள கட்சிகள், தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் அமைப்பது, தேர்தல் பிரசார யுக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.