அவினாசியில் செயல்படாத தானியங்கி சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி

அவினாசியில் செயல்படாத தானியங்கி சிக்னலால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2020-03-10 22:11 GMT
அவினாசி, 

திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரம் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.47 -ல் அமைந்துள்ளது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனம் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த அவினாசி நகரை மையமாக கொண்டு சென்று வருகின்றன. இதனால் அவினாசி - கோவை மெயின்ரோட்டில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது.

இங்கு ஏராளமான திருமண மண்டபங்கள், வரலாற்று சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. எனவே கல்யாண முகூர்த்த நாட்களில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவில் மற்றும் மண்டபங்களில் திருமண வைபவம் நடத்தி செல்கின்றனர். இதுபோன்ற விசேஷ நாட்களில் மிக அதிக அளவில் அவினாசியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன.

இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் அவினாசி மெயின்ரோடு, ஆட்டையாம்பாளையம் நால்ரோடு, சேவூர் ரோடு, பன்னாரி மாரியம்மன் கோவில் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அவினாசியில் பிரதான சந்திப்புகளில் தானியங்கி சின்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து அவினாசி கோபிரோடு சந்திப்பு, ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டது.

ஆனால் அந்த தானியங்கி சிக்னல்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாடில்லாமல் பயனற்றுபோனது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்த்து விபத்துகளை தடுக்க ஆட்டையாம்பாளையம் நால்ரோடு, கோபிரோடு சந்திப்பு, பன்னாரி மாரியம்மன் கோவில் பகுதி ஆகிய இடங்களில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்