'கடவுளுக்கு தியாகம்'; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்றனர்.;
லக்னோ,
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60). இவர் பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டின் அருகே உள்ள தனது குடிசைக்கு சென்ற முகமது அன்சாரி தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்சாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்சாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், அன்சாரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அன்சாரி கழுத்தறுத்து தற்கொலை செய்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், எனது உயிரை கடவுளுக்கு (அல்லா) தியாகம் செய்கிறேன்' என்று அன்சாரி எழுதியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.