ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2020-03-11 22:30 GMT
நாகர்கோவில்,

கருங்கல் திப்பிறமலை பகுதியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி சுஜிதா குமாரி (வயது 59). இவருடைய மகள் ஸ்ரீஜா. இவருக்கு திருமணமாகி மேக்காமண்டபத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சுஜிதா குமாரிக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கருங்கல் பாலூரில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்த நிலத்தை தட்டான்விளையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான லிகோரிவளன்(47) என்பவருக்கு ரூ.12 லட்சத்துக்கு விற்க சுஜிதாகுமாரி முடிவு செய்தார். இதற்காக ரூ.8 லட்சம் முன் பணமாக அவரிடம் இருந்து சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் பெற்று கொண்டனர்.

இந்த நிலையில் அந்த நிலத்தை லிகோரிவளனுக்கு தெரியாமல் மேக்காமண்டபத்தை சேர்ந்த சலீம் என்பவருக்கு சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இதனை அறிந்த லிகோரிவளன், சுஜிதா குமாரி மற்றும் ஸ்ரீஜாவிடம் கொடுத்த முன்பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து உள்ளனர்.

3 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து லிகோரிவளன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், சுஜிதாகுமாரி, ஸ்ரீஜா ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும் இருவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.8 லட்சத்தையும், பணத்தை பெற்ற நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார்.

மேலும் செய்திகள்