லாரி-கார் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 2 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்கள் 3 பேருடன் ஒரு காரில் கோவிலாப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு சென்றனர்.;

Update:2025-12-22 05:11 IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மணப்பட்டியை சேர்ந்தவர் அஷ்விந் (வயது 34). இவர் கோவிலாப்பட்டியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களான சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22), குருமூர்த்தி(24), சுப்பிரமணியன்(40) ஆகியோருடன் கோவிலாப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் கூச்சலிடவே அந்த வழியாக சென்றவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஷ்விந், குருமூர்த்தி, சூர்யா ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், டிப்பர் லாரி டிரைவரான உத்தமசாலையை சேர்ந்த செல்வகுமார்(35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்