கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் நிவாரணம் கேட்டு கைக்குழந்தைகளுடன் வந்த பெண்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தார்
கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் நிவாரணம் கேட்டு கைக்குழந்தைகளுடன் வந்த பெண், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.;
ஈரோடு
கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் நிவாரணம் கேட்டு கைக்குழந்தைகளுடன் வந்த பெண், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
நிவாரணம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
சிவகிரி கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி (வயது 34) தனது கைக்குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
எனது கணவர் டிரைவர் வேலை செய்து வந்தார். எங்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு நான் 7 மாத கர்ப்பமாக இருந்தபோது எனது கணவர் கொரோனா தொற்று பாதித்து இறந்துவிட்டார். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவர் இறந்ததால், வாழ்வாதாரமின்றி 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். எனக்கு நிவாரண நிதியும், குழந்தைகளை பராமரிக்க அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
டாஸ்மாக் கடை
ஈரோடு வீரப்பன்சத்திரம் சுக்கிரமணியகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எங்களது பகுதியில் விசைத்தறி கூடங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அங்கு பெண்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்கு சென்று வர சிரமம் ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தன.