விஜய் காரை மறித்த தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி

2 நாட்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு பனையூரில் அஜிதா அவரது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.;

Update:2025-12-25 17:54 IST

தூத்துக்குடி,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சி களம் காண்கிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2½ ஆண்டுகளாக கட்சி கட்டமைப்பு விஜய் வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் த.வெ.க. அமைப்புரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவியை விஜய் வழங்கினார்.

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைப்புரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை விஜய் அதிகரித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் மற்றும் புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு 23-ம் தேதி வரவழைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் நிர்வாகிகள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனவே அஜிதா ஆக்னஸ் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வெளியே கண்ணீருடன் காத்திருந்தார்.

இந்த நிலையில் புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து கூறி நியமன ஆணையை வழங்குவதற்காக விஜய் காரில் வந்தார். அப்போது அஜித் ஆக்னஸ் தனது ஆதரவாளர்களுடன் விஜய் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே விஜய்யுடன் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், பவுன்சர்களும் அஜித் ஆக்னஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை விலகிவிட்டனர். இதைத்தொடர்ந்து விஜய்யின் கார் கட்சி அலுவலகத்துக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நிறைவடையும் தருவாயில் த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் வெளியே வந்தனர். கட்சி அலுவலகத்தின் வெளியே காத்திருந்த அஜிதா ஆக்னஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் சமாதானமாகாத அவர் தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில் த.வெ.க. தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இதனிடையே தனது போராட்டத்தை கைவிட்ட அஜிதா ஆக்னஸ், தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கடைசி வரை விஜய்யுடன் இணைந்து பயணிப்போம் எனவும் கூறினார்.

இந்தநிலையில்,அஜிதா ஆக்னஸை சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் சிலர் திமுகவின் கைகூலிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்