இரவு உணவு சாப்பிட்ட 100 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
மங்களூருவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதில் 100-க்கும் அதிகமான பேருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரு:-
உணவு விஷம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகர் பகுதியில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தட்சிண கன்னடா மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்குவதற்காக கல்லூரியில் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 பேரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று மாலை திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் துடித்துடித்துபோன மாணவிகள் கூச்சலிட்டு கதறினர். இதை பார்த்த கல்லூரி மற்றும் விடுதி நிர்வாக அதிகாரிகள் அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள வெவ்வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் ஆஸ்பத்திரியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளையும் சந்தித்து விசாரித்தார்.
அப்போது சுமார் 100-க்கும் அதிகமான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. உணவு விஷமாக மாறியதே காரணம் என்று கூறப்படுகிறது.மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மங்களூரு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.