"ஆதர்ஷ் நிலையம்" திட்டத்தின் கீழ் 2022-23க்குள் 1,253 ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்: மத்திய அரசு

1,253 ரெயில் நிலையங்கள் 2022-23 நிதியாண்டுக்குள் ஆதர்ஷ் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

Update: 2022-08-05 10:22 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், "நாட்டின் ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் அரசாங்கத்தால் செய்யப்படுகிறதா" என்ற கேள்வியை இன்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி நர்ஹரி அமீனின் எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய ரெயில்வே துறைக்கான மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்கள் வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் இதுவரை 1,215 நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள நிலையங்கள் 2022-23 நிதியாண்டுக்குள் ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

இந்திய ரெயில்வேயில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்கும் மாதிரி, நவீன மற்றும் ஆதர்ஷ் நிலையத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது.

2021-22 நிதியாண்டில், ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.2,344.55 கோடியும், நடப்பு 2022-23 நிதியாண்டில், ரூ.2,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் ஒன்றும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக இதுவரை 52 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்