“மக்களின் தவறான எண்ணத்தை மாற்றுங்கள்” - இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் மோடி உரையாடல்

காவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Update: 2021-07-31 11:11 GMT
ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள சர்தார் சல்லபாய் பட்டேல் தேசிய காவலர் அகாடமியில் பயிற்சி பெற்ற 144 இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேசத்தின் நலனை மனதில் வைத்து எடுக்க வேண்டும். நாடே முதன்மை, எப்போதும் முதன்மை என்பதன் அடிப்படையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும், பயங்கரவாதத்தை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் சில சமயங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்து பணியாற்றுகின்றனர். அவ்வாறு இருப்பினும் பொதுமக்களுக்கு ஏன் காவல்துறை மீது நம்பிக்கை அதிகரிக்கவில்லை? இதனை மாற்ற வேண்டும். நீங்கள் அமைப்பை மாற்றுவதும், அமைப்பு உங்களை மாற்றுவதும், உங்களின் பயிற்சி, எண்ணம், நன்னடத்தையை பொறுத்தது.

சுதந்திர போராட்டத்தின் போது, நாட்டிற்காக மக்கள் உயிர் தியாகம் செய்தனர். இன்று நாட்டிற்காக நீங்கள் வாழ வேண்டும். பெருமைமிக்க மற்றும் கட்டுப்பாடு கொண்ட இந்தியாவை அமைப்பதற்கான அடித்தளத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனை செய்வதற்காக இந்த நாடு உங்களை தேர்வு செய்துள்ளது. நவீன, திறமையான காவல்துறையை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.”

இவ்வாறு பிரதமர் பேசினார்.

மேலும் செய்திகள்