துங்கபத்ரா அணையில் வினாடிக்கு 1.44 லட்சம் கனஅடி நீர் திறப்பு

துங்கபத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 1.44 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2022-07-16 22:30 IST

விஜயநகர்;

1.44 லட்சம் கனஅடி

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக விஜயநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒசப்பேட்டேயில் உள்ள துங்கபத்ரா அணை நிரம்பி உள்ளது.

அணைக்கு நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 195 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோவிலை சூழ்ந்த வெள்ளம்

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கதக் தாலுகா மதலகட்டியில் உள்ள ஆஞ்சநேய கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆனால் நேற்று அந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் ஆபத்தையும் மீறி வந்து சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணா ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகா சிங்கடாலூரில் உள்ள தடுப்பணை நிரம்பியது.

அந்த தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபோல பாகல்கோட்டை மாவட்டம் ரபகவிபனஹட்டி தாலுகா ஹிப்பரகியில் உள்ள தடுப்பணையில் இருந்தும் நேற்று வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணா ஆற்றில் கூடுதலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றங்கரையோர மக்கள் பீதியில் உள்ளனர்.

முதலைகள், நீர் நாய்கள்

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராய்ச்சூர் தாலுகா குருஜாபுரா, குருதாபூர், ஹரசல், அரக்கனகி ஆகிய கிராமங்களில் உள்ள ஆற்றங்கரையில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. ஆற்றில் முதலைகள் நீந்தி செல்லும் காட்சிகளும், பாறைகள் மீது அமர்ந்து இருக்கும் காட்சிகளும் சமூக வலைத்

தளங்களில் வைரலாகி உள்ளன. முதலைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இதுபோல ஒசப்பேட்டேயில் உள்ள துங்கபத்ரா அணையின் கரையில் நீர் நாய்களும் நடமாடின.

மராட்டியத்தில் இருந்து நீர்நாய்கள் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெலகாவியில் பெய்து வரும் கனமழையால் பல்லாரி கால்வாய் உடைந்து எல்லூர் கிராமத்திற்குள் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சோளம், கரும்பு பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் முடலகி தாலுகாவில் அவராதி-மகாலிங்கபுரா, சுனகோல்-முடலகி, வடரேஹட்டி-உடஹட்டி, முடலகி-பைரனஹட்டி கிராமங்களை இணைக்கும் பாலங்கள் மூழ்கி உள்ளன. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது.

3 பேர் சாவு

சவதத்தி தாலுகா ஹிருரா கிராமத்தில் பெய்த கனமழைக்கு மின்கம்பி அறுந்து கரும்பு தோட்டத்தில் விழுந்தது. ஆனால் மின்கம்பியை கவனிக்காமல் பக்கீரப்பா(வயது 54), மகாதேவா(40) ஆகிய 2 பேரும் மிதித்து விட்டனர். இதனால் அவர்கள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபோல நிப்பானி தாலுகா மங்கூரு கிராமத்தில் தூத்கங்கா ஆற்றில் மீன்பிடித்து கொண்டு இருந்த சிவாஜி பூர்வி(55) என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே கர்நாடகத்தில் தொடர் கனமழைக்கு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்