கூடுதல் டி.ஜி.பி.யின் நண்பர்கள் வீடுகளில் சி.ஐ.டி. போலீஸ் சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலின் நண்பர்கள் வீடுகளில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள்.;
பெங்களூரு:
நண்பர்கள் வீடுகளில் சோதனை
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றிருந்ததால், அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் ஆள்சேர்ப்பு பிாிவு முன்னாள் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து அம்ருத்பால் பல கோடி ரூபாய் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது
குறித்து சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அம்ருத் பாலுக்கு நெருக்கமானவர்களும், அவரது நண்பர்களுமான 2 போின் வீடுகளில் சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அதாவது பெங்களூரு சககாரநகரில் வசிக்கும் தொழில்அதிபரான சம்பு லிங்கய்யா மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபரான ஆனந்த் ஆகிய 2 பேரின் வீடுகள், அவர்களது அலுவலகங்களில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை சோதனை நடந்தது.
லே-அவுட் அமைக்க பணம் முதலீடு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு மூலமாக கிடைத்த பணத்தில் அம்ருத் பால் சொத்துகள் வாங்கி இருப்பதாகவும், அதற்கு சம்பு லிங்கய்யா மற்றும் ஆனந்த் பினாமி போல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர தொட்டபள்ளாப்புராவில் ஆனந்த் தற்போது புதிதாக லே- அவுட் அமைத்து வருகிறார். இந்த லே-அவுட் அமைக்கவும் அம்ருத் பால் பணம் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பு லிங்கய்யா, ஆனந்த் வீடுகளில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி இருப்பதாகவும், சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சம்பு லிங்கய்யா, ஆனந்திடம் நேற்று சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தகவல்களையும் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 2 பேருக்கும் போலீசார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.