பெண்ணிடம் நூதனமுறையில் பணம் மோசடி: 2 பேர் கைது

பாலியல் புகார் கொடுக்க போலீசாரிடம் சென்ற பெண்ணிடம் நூதனமுறையில் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-07-28 23:32 IST

கோலார் தங்கவயல்:

பாலியல் புகார்

கோலார் தங்கவயல் தாலுகா பேத்தமங்களா அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு, வேணுகோபால் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி பேத்தமங்களா போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியில் பெண்ணிடம் பேச்சு கொடுத்த 3 பேர் சாதாரணமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டும் என்றும், எங்களிடம் தந்தால் பணத்தை போலீசாரிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

பணம் மோசடி

இதை நம்பிய பெண்ணும், அவர்களிடம் ரூ.1.05 லட்சத்தை தவணை, தவணையாக கொடுத்துள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சந்தேகமடைந்த பெண், பணத்தை திரும்பிக்கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அவர்கள், பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று பெண்ணை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் 3 பேர் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பெண்ணை நூதன முறையில் ஏமாற்றியது ரெட்டிஹள்ளியை சேர்ந்த சுமன் (வயது 22), சித்தாரெட்டி திண்னே கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் (24) மற்றும் பார்கவா ஆகியோர் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து சுமன் மற்றும் சீனிவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். மேற்கொண்டு விசாரணையில், அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருவோரை வழிமறித்து போலீசாருக்கு லட்சம் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பவைத்து பல லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்