பெங்களூருவில், அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
சொந்த ஊர்களுக்கு பணி இடமாற்றம் செய்ய கோரி, பெங்களூருவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் பைகளில் விஷப்பாட்டில்கள் உள்ளதா என போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு உண்டானது.;
பெங்களூரு:
சொந்த ஊர்களுக்கு பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வடகர்நாடகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளையும் அழைத்து வந்தனர். இதில் ஒரு ஆசிரியை கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஒருவர் விஷப்பாட்டிலை கையில் வைத்து கொண்டு போராட்டம் நடத்தினார். இதுபற்றி அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்றனர்.
பரபரப்பு
அப்போது ஆசிரியர்கள் மத்தியில் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும்போது, நீங்கள் எல்லாம் அரசு ஊழியர்கள். இதனை உணர்ந்து போராட்டம் நடத்துங்கள். இங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் அனைவர் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலைக்கு என்னை தள்ளிவிடாதீர்கள் என்று கூறினார். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது பைகளில் விஷப்பாட்டில்களை வைத்து உள்ளார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு சில ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. இதன்பின்னர் போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடந்தது.