சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த தம்பதி கைது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 1½ மாதங்களுக்கு பின்பு சி.ஐ.டி. போலீசாரிடம் 2 பேரும் சிக்கி உள்ளனர்.

Update: 2022-05-30 16:08 GMT

பெங்களூரு:

தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பா.ஜனதா, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த நீர்ப்பாசுனத்துறை உதவி என்ஜினீயரான மஞ்சுநாத்தும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கலபுரகி மாவட்டம் சேடம் பகுதியை சேர்ந்த சாந்திபாயிடம் பணத்தை பெற்று கொண்டு, தேர்ச்சி பெற வைத்ததும் தெரியவந்தது. அதாவது பா.ஜனதா பெண் பிரமுகரான திவ்யாவுக்கு சொந்தமான பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி சாந்திபாய் வெற்றி பெற்றிருந்தார்.

ஐதராபாத்தில் தம்பதி கைது

இதையடுத்து, சாந்திபாயிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தார்கள். ஆனால் சாந்திபாய் தனது கணவர் பசய்யா நாயக்குடன் தலைமறைவாகி விட்டார். கடந்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதிக்கு பின்பு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விசாரணை தீவிரமடைந்ததும், அவர் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து, சாந்திபாயை கைது செய்ய கடந்த 1½ மாதங்களாக சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் பதுங்கி இருந்த சாந்திபாய், அவரது கணவர் பசய்யா நாயக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் ஐதராபாத்தில் இருந்து கலபுரகிக்கு அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் தம்பதியை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சாந்திபாய் சிக்கி இருப்பதால், அவரிடம் இருந்து மஞ்சுநாத் வாங்கிய பணம், தேர்வை எப்படி முறைகேடாக எழுதினார் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்